வட தமிழகத்தில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் :
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனேக இடங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. சென்னைப் பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் மழை நிலவரம் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
அவர் பேசியதாவது, “ வட தமிழகத்தில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மாலை, இரவு நேரங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்க நல்லுரில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. காட்டுக்குப்பம், மன்னார்குடி, நீடாமங்கலத்தில் 5 செ.மீ. தாம்பரத்தில் 4 செ.மீ., சோழவரம், மகாபலிபுரம், கேளம்பாக்கம், மேட்டுப்பட்டி, இளையாங்குடி, மயிலாடுதுறை, வேதாரண்யம், பரமக்குடி, ஏற்காடு, திருவாரூர், சித்தம்பட்டி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
அதே போன்று, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழையால் கடுமையான வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அந்த மழை வெள்ளத்தால் தமிழகத்தில் உள்ள மேட்டூர் உள்பட பெரும்பாலான அணைகளும் நிரம்பி வழிந்தன. எனினும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அதிக அளவில் மழை பொழியவில்லை.