தமிழகத்தில் மழை சென்னை வானிலை மையம் தகவல் : சென்னையின் காலநிலை ஒவ்வொரு மணித்திலாயத்திற்கும் ஒவ்வொன்றாக மாறி வருகிறது. திடீரென வெயில் வாட்டி எடுக்கிறது. திடீரென கார்மேகம் சூழ்ந்து எப்போது மழை பெய்யும் என்று எதிர்பார்க்க வைக்கிறது.
நேற்று காலை முதலே சென்னையில் வெயில் வாட்டி எடுத்த நிலையில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை வரை பரவலாக பல இடங்களில் மழை பெய்து வந்தது.
தமிழகத்தில் மழை : சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்
இந்நிலையில் சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்றும், இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் வருகின்ற 5ம் தேதி வரை பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்த வளிமண்டல சுழற்சி அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையும். இதனால் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் 6 முதல் 8ம் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைப் பொழிவு இருக்கும் என பாலச்சந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.