Advertisment

தினகரனின் திடீர் எழுச்சியும் வீழ்ச்சியும்

டிடிவி தினகரனின் கைது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் தமிழக அரசியலில் இதன் பாரதூர விளைவுகள் பெரும் விவாதப் பொருளாகியிருக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தினகரனின் திடீர் எழுச்சியும் வீழ்ச்சியும்

அஇஅதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்து லஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இந்தக் கைது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் தமிழக அரசியலில் இதன் பாரதூர விளைவுகள் பெரும் விவாதப் பொருளாகியிருக்கின்றன.

Advertisment

சசிகலாவின் குடும்ப அரசியல்

தமிழகத்தின் மிகப் பெரிய கட்சியும் 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் வரலாற்றில் 28 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ள அதிமுகவில் 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானதில் இருந்து அவரது நெருங்கிய தோழியும் உடன்பிறவா சகோதரியுமான வி.கே.சசிகலா மற்றும் அவரது பெருங்குடும்பத்தினரின் மறைமுக அதிகாரமும் தலையீடும் இருந்துவந்துள்ளது.

publive-image

சசிகலாவின் சகோதரரின் மகனான டி.டி.வி தினகரனும் கட்சியில் செல்வாக்கு செலுத்திவந்துள்ளார். 2012-ம் ஆண்டு சசிகலாவையும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. சில மாதங்களுக்குப் பின் சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்டவர், அவரது குடும்பத்தினர் யாரையும் சேர்த்துக்கொள்ளவில்லை. அவர்களில் தினகரனும் ஒருவராவார்.

ஆனால் சசிகலா குடும்பத்தவர்களில் நேரடியாக ஆட்சியில் பங்கேற்றது தினகரன் மட்டுமே. 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் வென்று முழுப் பதவிக்காலத்தை நிறைவு செய்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்ட சசிகலா, கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து சிறை சென்றார். இந்நிலையில் தினகரனை துணைப் பொதுச் செயலாளராக்கினார்.

அவர் திடீரென்று கட்சியின் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவரப்பட்டது கட்சிக்குள்ளேயே சில சலசலப்புகளை ஏற்படுத்தினாலும் அவை அப்போது வெளியே தெரியவில்லை. துணைப் பொதுச்செயலாளரானபின் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கினார் தினகரன். ஆனால் வாக்காளர்களுக்கு பெரும்பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை அடுத்து அத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதற்கு முன் அதிமுக கட்சியின் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் நிலையில் கட்சியின் இரட்டை இலை சின்னம் இரண்டு பிரிவுகளுக்கும் கிடையாது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

தினகரன் கைதும் அதன் நோக்கங்களும்

இப்போது இந்த சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார் தினகரன். தில்லியில் உள்ள தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலமாக தேர்தல் ஆணையத்துக்குப் லஞ்சம் கொடுத்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்க முயன்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

publive-image

ஏப்ரல் 16-ம் தேதி அன்று தில்லியில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடமிருந்து ரூ.1.30 கோடி ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியது தில்லி போலீஸ். அதையடுத்து அவர் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்து இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத்தர ரூ.50 கோடி லஞ்ச ஒப்பந்தம் போட்டிருப்பதாக போலீஸ் சந்தேகித்தது.

தினகரனும் அவரது உதவியாளர் மல்லிகார்ஜுனா என்பவரும் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு நான்கு நாட்கள் விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தினகரனை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ள தில்லி காவல்துறை நேற்று அவரைச் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வந்து சோதனை நடத்தியிருக்கிறது.

முன்னதாக இந்த லஞ்சக் குற்றச்சாட்டில் தினகரன் சிக்கியபின் அஇஅதிமுக அமைச்சர்கள் தினகரனைப் பதவி விலகக் கோரினார். எதிர்பாராதவிதமாக அவரும் உடனடியாக “கட்சியின் நலனை மனதில் வைத்து” பதவி விலகிவிட்டார்.

தினகரன் கைதை அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் மத்திய அரசை ஆளும் பாஜகவின் மீது சந்தேகத்தை எழுப்பும் விதத்தில் பேசிவருகின்றனர். சில வாரங்களுக்கு முன் “இன்னும் 50 ஆண்டுகளுக்கு பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டேன்” என்று தினகரன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததால் பாஜக அவரைக் குறி வைத்துத் தாக்குகிறதோ என்ற சந்தேகம் எழுப்பபட்டுவருகிறது.

தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்றால் லஞ்சம் வாங்கத் தயாராக இருந்த தேர்தல் ஆணைய அதிகாரி யார் என்பதைப் பற்றி ரகசியம் காக்கப்படுவது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எழுப்பியுள்ள கேள்வி புறம்தள்ளத் தக்கதல்ல.

எதிர்பார்த்ததுபோலவே அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துப் பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான பிரிவு தினகரன் கைது செய்யப்பட்டதை வரவேற்றுள்ளது. தமிழக மக்களில் பெரும்பாலானோர் தினகரனை ஊழல்வாதியாகவே பார்க்கிறார்கள்.

publive-image

தினகரன் உண்மையிலேயே தவறு செய்தாரா இல்லையா என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் தினகரன் ஊழல்வாதிதான் என்று நம்புவதால் அவர் மீதான நடவடிக்கையில் பாஜகவின் சுயநலம் சார்ந்த கணக்குகள் இருப்பது உண்மையாகவே இருந்தாலும் அதை அவர்கள் பெரிதாகப் பொருட்படுத்தப்போவதில்லை என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

ஜெயலலிதா இறந்த ஆறு மாதங்களுக்குள் அதிமுகவில் நடக்கும் மாற்றங்கள் மலைக்கவைப்பவையாக இருக்கின்றன. திடீரென்று ஆளும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான தினகரன் இரண்டு மாதங்களுக்குள் லஞ்ச வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். உண்மை புனைவைவிட விசித்திரமானது என்பதற்கான நிகழ்கால உதாரணமாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment