தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மற்றும் வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களாஇ சந்தித்தார். அப்போது பேட்டியளித்த அவர், “காவிரி விவகாரத்தில் தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட நினைப்பது தீர்வாகாது. அது சரியல்ல. எனவே இதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைந்து போராடினர். அந்தப் போராட்டம் மாபெரும் வெற்றியை அளித்தது அனைவரும் அறிந்தது. எனவே காவிரி நீரைப் பெறுவதற்கும் மேலாண்மை வாரியம் அமைப்பதன் முக்கியத்துவத்தை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குத் தீர்வு கொண்டு வர இளைஞர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் தினகரன் பேசினார்.
காவிரி பிரச்சினைக்காக நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக பா.ஜனதாவும் குரல் கொடுக்க வேண்டும். அதற்கு மாறாக வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் மிரட்டி வருவது சரியில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.