Chennai Tamil News: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை ஆளுநர் மாளிகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலு ஏற்பாட்டினை அக்டோபர் 1ஆம் தேதி (இன்று முதல்) அக்டோபர் 5ஆம் தேதி வரை பொதுமக்கள் வருகை தந்து பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 26ஆம் தேதியன்று, சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளுநரின் துணைவியார் லட்சுமி ரவி ஆகியோரால் 'நவராத்திரி கொலு' திறந்துவைக்கப்பட்டது.
தற்போது, பொதுமக்களின் பார்வைக்காக அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை, நாள்தோறும் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் பார்வையிட வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி கொலுவிற்கு வருகைதரும் மக்கள் தங்களின் பெயர், பாலினம், முகவரி, தொடர்பு எண், அடையாளச் சான்று மற்றும் பார்வையிடும் நாள் ஆகியவற்றை navaratrirb22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உறுதிசெய்யுமாறு வலியுறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் முதன்முறையாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில், ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு சமூகத்தினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
பொதுமக்கள் பார்வையிடும் நாளொன்றிற்கு 80 நபர்கள் வரை அனுமதி வழங்கப்படும். பார்வையிடும் நேரம் நான்கு கட்டங்களாக ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு கட்டத்தில் 20 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள். மக்களின் மின்னஞ்சலுக்கு அசல் அடையாளச் சான்று அனுப்பப்படும், அதைக்கொண்டு பார்வையிடும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, ஆளுநர் மாளிகையின் இரண்டாவது நுழைவு வாயிலுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையிட வரும் மக்கள் இந்தியக் குடிமக்கள் புகைப்படத்துடன் கூடிய செல்லத்தக்க அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வெளிநாட்டினராக இருந்தால், தங்களின் அடையாளத்திற்காக நுழைவுவாயிலில் கடவுசீட்டை காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் அலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகளுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil