இன்றைய தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையின் தணிக்கை நடவடிக்கைகள் அவசர காலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது என்று ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டின், முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜன 6) தொடங்கியது. இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர். அவை தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பிறகு ஆளுநர் உரையாற்ற இருந்த நிலையில், அரசின் உரையை நிகழ்த்தாமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார்.
தேசிய கீதம் இசைக்காததால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறியதாக ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, சட்டப்பேரவையில் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படுவதும் மரபு என பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளின் தணிக்கை தொடர்பாக விமர்சனம் செய்து பதிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இவை அவசர காலத்தை நினைவுபடுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், "இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.
அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.