ஆளுநரின் நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு செயல்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றுமுன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அவர் காரில் சென்றபோது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி உள்ளிட்ட 293 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றனர். இதனால் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட 1,111 திமுகவினர் மீது 2 பிரிவுகளின்கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக அனுமதியின்றி கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் என்ற 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ஆளுநர் மாளிகை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. தமிழக அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை; மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். ஆளுநரின் நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு செயல்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என ஆளுநர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More Details Awaited...