தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக செயலாற்றி வரும் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் இந்த மாத இறுதியில் துணை முதல்வராகிறார் என செய்திகள் வெளியாகின. நமது 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழில் கூட உதயநிதி ஸ்டாலின், ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்க்கப்பட்ட போது அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பார் என்று கூறினார். இதனையடுத்து, அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்க்கப்பட்ட போது அவர், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க கோரிக்கை வலுத்து வருகிறதே என்ற கேள்விக்கு, துணை முதலமைச்சர் பதவி குறித்து கோரிக்கை வலுத்து வருகிறது.. ஆனால் அது பழுக்கவில்லை" என்று பதிலளித்தார்.
ராஜகண்ணப்பன் பேச்சால் பரபரப்பு
இந்த நிலையில், 'வருகிற 19 ஆம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதியை துணை முதல்வர் எனக் கூற வேண்டும்' என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம், இன்று (வெள்ளிக்கிழமை) கோவையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், ராமநாதபுரத்தில் தமிழ்ப் புதல்வன் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகிக்கும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் திறன் வளர்ச்சி திட்டம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது”என்றார். அடுத்தாக வரியில் “அவர் துணை முதல்வர்” எனக் கூறினார். இதன்பின்னர், சுதாரித்துக் கொண்ட அவர் சட்டென்று, “வரும் 19 ஆம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதியை துணை முதல்வர் எனக் கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்த கேள்விக்கு, 'துணை முதலமைச்சர் பதவி குறித்து கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், அது பழுக்கவில்லை' என முதல்வர் ஸ்டாலின் சூசகமாக கூறியிருக்கும் நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் பொதுவெளியில், 'அமைச்சர் உதயநிதியை வரும் 19-க்கு பிறகு துணை முதல்வர் என அழைக்க வேண்டும்' என்று கூறியிருப்பது தி.மு.க-வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“