தூதுவன் வருவான்... மாரி பொழியும்! சென்டிமென்ட்டாக வைரலாகும் 'ராஜ ராஜ சோழன்' மீம்!

தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை பெரியகோவில், மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலின் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜராஜ சோழன் சிலை (உயரம் 75 செ.மீ.) மற்றும் அவரது பட்டத்து இளவரசி ராணி லோகமாதேவி சிலை (உயரம் 55 செ.மீ.) ஆகிய 2 சிலைகளும் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது.

சிலை தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணைக்குப் பிறகு, குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜராஜ சோழன் சிலை மற்றும், லோகமாதேவி சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டு வந்தனர். அதன்பின், தஞ்சைக்கு இந்த சிலைகள் கொண்டுச் செல்லப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக, அம்மாநில அரசு உபரி நீரை திறந்துவிட, மேட்டூர் அணை இன்று முழு கொள்ளளவை எட்டியது. அதிலிருந்து, 50,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சமீபகாலமாக டெல்டா பகுதிகளில் பெய்த மழை மற்றும் தற்போது வந்திருக்கும் காவிரி நீரால், தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், தற்போது மீம் ஒன்று வைரலாகி வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில், சோழ தேசத்தின் அரசனும், மக்களும் எதிரிகளிடம் சிக்காமல் பல வருடங்களாக மறைவிடத்தில் பதுங்கி இருக்கும் போது, ‘தூதுவன் வருவான்… மாரி பொழியும்…. அவன் சோழ தேசத்திற்கு அழைத்துச் செல்வான்’ என வசனம் இடம் பெற்றிருக்கும். அதேபோல், கிளைமாக்சில், நாயகன் கார்த்தி, சோழ தேசத்தின் தூதுவனாக வந்து, சோழ இளவரசனை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி கொண்டுச் செல்வது போலவும், அப்போது மழை பெய்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

இந்தக் காட்சிகளை ஒப்புமைப்படுத்தி, மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் சிலை தஞ்சை வந்ததால், மழை பொழிந்து, அவர் அனைவரையும் சோழ தேசத்திற்கு அழைத்து செல்கிறார் என்பது போன்று மீம் உருவாக்கப்பட்டு அதிகம் ஷேர் ஆகி வருகிறது. அப்படத்திற்கு இசையமைத்தவரும், பொதுப் பிரச்சனைகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொள்பவருமான ஜி.வி.பிரகாஷ், ரசிகர் ஒருவர் ஷேர் செய்திருந்த இந்த மீம்-ஐ லைக் செய்துள்ளார்.

இந்த மீம் உண்மையில் விவசாயிகள் மத்தியில் சற்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் பெரும்பாலானோர் விவசாய குடும்பமாக இருப்பதால், சென்டிமென்ட்டாக அனைவரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close