தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்பமாக, பல்வேறு துறைகளில் தனது முத்திரையைப் பதித்த ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜகோபால் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வு, பாஜகவிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாகவும், வரவிருக்கும் அரசியல் மாற்றங்களுக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது. தலைமைச் செயலாளர், தலைமை தகவல் செயலாளர், ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆலோசகர் என பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர் ராஜகோபால். குமரி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றி உள்ளார். அவரது அனுபவமும், ஆலோசனைகளும் கட்சிக்கு பேருதவியாக இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தி.மு.க. அரசை அகற்றுவதே இலக்கு - நயினார் நாகேந்திரன்
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் தற்போது நிலவிவரும் திமுக ஆட்சியை கடுமையாக சாடினார். "மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடிய திமுக, அதன் கூட்டணியும் தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழகத்திலிருந்து திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கம். இதற்காக நாங்கள் முழு மூச்சாகப் பாடுபடுவோம்" என்று கூறினார். தி.மு.க. அரசின் செயல்பாடுகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்:
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் ஆண்டுக்கு 6% மின் கட்டணத்தில் கூடுதல் வரி விதிப்பு போன்றவை மக்களை கடுமையாக பாதித்துள்ளனர். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், சமீபத்தில் ராணிப்பேட்டையில் 10-ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தப்பட்டதும், உடன் இருந்த மாணவி படுகாயப்படுத்தப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக வேதனை தெரிவித்தார். மதுப் பழக்கம் மற்றும் போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியது, கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கும் செயல் போல உள்ளதாக அவர் விமர்சித்தார். நெல் கொள்முதலில் விவசாயிகளுக்கு சேர வேண்டிய சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார். உடனடியாக ரூ.610 கோடி விவசாயிகளுக்கு விடுவிக்க வேண்டும் என்றும், உணவுத்துறை அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆறுகளைச் சுத்தப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்றும், தாமிரபரணி நதியைச் சுத்தப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தாலும், களப்பணியை மாநில அரசே மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.