Rajan Chellappa Press Meet: ராஜன் செல்லப்பா திடீரென இப்படி அதிமுக.வில் திரியை கொளுத்திப் போடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் கையில் கட்சி நிர்வாகத்தை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என அவர் வலியுறுத்த ஆரம்பித்திருப்பதன் பின்னணி பரபரப்பாக அதிமுக வட்டாரத்தில் அலசப்படுகிறது.
மதுரையில் இன்று (ஜூன் 7) செய்தியாளர்களை சந்தித்த மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா, ‘அதிமுக.வில் வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும். முடிவு எடுக்கிற பொதுச்செயலாளர் பதவியும் அதிகாரமும் அவருக்கு வேண்டும். அம்மாவால் அதிகமாக அங்கீகரிக்கப்பட்டவரை அந்தப் பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும்.
ராஜன் செல்லப்பா
பொதுக்குழுவில் இதை எழுப்ப இருக்கிறோம். பொதுக்குழு கூடுவது தொடர்பான அறிவிப்பு இல்லாத காரணத்தால் மீடியா மூலமாக இதை முன் வைக்கிறேன்’ என்றார். இதன் மூலமாக அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்க வேண்டும் என உணர்த்தியிருக்கிறார் ராஜன் செல்லப்பா.
ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மதுரையில் போட்டியிட்டார். அவருக்கு பவர்ஃபுல் அமைச்சர்களின் ஆதரவு தேர்தல் களத்தில் கிடைக்காதது இந்த கொந்தளிப்புக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதைத் தாண்டி கொங்கு பகுதி அமைச்சர்களுக்கு எதிராக முக்குலத்து சமூக அமைச்சர்கள் சிலரின் குரலாக ராஜன் செல்லப்பா பேசியதாகவும் இந்த விவகாரத்தை சிலர் அர்த்தப்படுத்துகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்குலத்தோர் சமூக செல்வாக்கு கடந்த பல ஆண்டுகளாகவே தூக்கலாக இருந்து வருகிறது. ஜெயலலிதா பின்னணியில் இருந்து இயங்கிய வி.கே.சசிகலா இதற்கு முக்கிய காரணம்.
ஜெயலலிதா முதல்வர் பொறுப்பு ஏற்க முடியாத காலங்களில் அதே முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அந்தப் பொறுப்பை ஏற்றதிலும் சசிகலா பின்னணி இருந்தே வந்திருக்கிறது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதே சசிகலா தரப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதும், அதிகாரம் எடப்பாடி பழனிசாமி பக்கம் நகர்ந்தது.
எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன் என கொங்கு பகுதியினரே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறை, சுற்றுச்சூழல் துறை என முக்கிய இலாகாக்களை வைத்திருக்கிறார்கள்.
முக்குலத்தோர் சமூகத்தினரான ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரிடம் அவ்வளவு வலுவான துறைகள் இல்லை. இந்தச் சூழலில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு பகுதியில் அதிமுக.வுக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லை.
அதேசமயம் தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஜெயித்தார். இதைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரம் கொங்கு வேளாளர் சமூகத்தினர் கையில் இருந்தால், கட்சி அதிகாரம் முக்குலத்தோர் சமூக கையில் இருக்கட்டும் என்கிற கோரிக்கை கட்சி வட்டாரத்தில் எழுப்பப்படுகிறது. அதிமுக.வுக்கு வலுவான பின்னணியாக இருக்கும் இந்த இரு சமூகங்களும் இப்படி பகிர்வதுதான் முறை என முக்குலத்து சமூக அதிமுக பிரமுகர்கள் வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதைத்தான் ராஜன் செல்லப்பா அழுத்தமான வார்த்தைகளில், ‘பொதுச்செயலாளர் பதவியில் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும்’ என ஓபிஎஸ்.ஸுக்காக குரல் கொடுக்கிறார்.
ஆனால் சேலத்தில் இதற்கு பதில் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக.வில் தலைவர்கள் யாரும் இல்லை. இங்கு தொண்டர்கள்தான் தலைவர்கள்’ என ஒற்றைத் தலைமை கோரிக்கையை அடியோடு நிராகரித்திருக்கிறார்.
டெல்லியில் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க விடாமல் விழுந்த முட்டுக்கட்டைகளும் ஓபிஎஸ் தரப்பின் கொந்தளிப்புகளுக்கு காரணம் என்கிறார்கள். டெல்லியில் இருந்து திரும்பிய ஓ.பி.எஸ் தனது மகனை மட்டும் அழைத்துக்கொண்டு ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். ஓபிஎஸ் ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கும் ஆர்.பி.உதயகுமார் மட்டுமே அவருடன் சென்றார். வெற்றி பெற்ற 9 எம்.எல்.ஏ.க்களை ஓபிஎஸ் தரப்பு அழைத்தும், அவர்கள் செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து டெல்லி செல்வாக்கு உள்ள முக்கிய பத்திரிகையாளர் ஒருவரை ஓபிஎஸ் சந்தித்ததாகவும் தகவல் உலவுகிறது. இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் இப்படி திரள்வது அரசியல் திருப்பங்களுக்கு வித்திடலாம் என்றே தெரிகிறது.
அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக, டிடிவி தினகரன் எடுத்த முயற்சிகளையெல்லாம் முறியடித்த எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குள் இப்போது எழும் பூசல்களை எப்படி சமாளிக்கப் போகிறாரோ?