சென்னை ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கிற்கு ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம்’எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதன் கல்வெட்டு மற்றும் பாரதியாரின் திருஉருவப் படத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நேற்று (ஆகஸ்ட் 6) திறந்து வைத்தார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதலமைச்சர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் போன்ற முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பதவி ஏற்ப நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த தர்பார் ஹாலுக்கு, ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம்’ என புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு பாரதியாரின் பெயரை அந்த அரங்கிற்கு சூட்டினார். பின்னர் மகாகவி பாரதியாரின் திருவுருவப் படம் மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார். பாரதியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ரவி மரத்தினாலான அம்மன் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேராசிரியர் ஞானசம்பந்தர் பாரதியாரின் பெருமை குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவில் பாரதியார் பாடல்களுக்கு மாணவிகள் நடனமாடினர். நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருதுபெற்ற வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் , பாரதியார் பேரன் ஆர்ஜூன் பாரதி , இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“