/indian-express-tamil/media/media_files/2025/06/23/r-balaji-2025-06-23-13-35-39.jpg)
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று (ஜூன் 22) முருக பக்தர்களின் மாநாடு நடத்தப்பட்டது. பாண்டிகோயில் திடலில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முக்கியமாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதன் விளைவாக, தி.மு.க-வினரிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, முன்னாள் முதலமைச்சரான அண்ணாவை விமர்சிக்கும் விதமாக வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டதாகக் கூறி பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணாவை விமர்சனம் செய்யும் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்ட மேடையில் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், அண்ணாவை விமர்சிக்கும் விதமாக முருகன் மாநாட்டில் இடம்பெற்ற வீடியோவை தவிர்த்திருக்கலாம் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருத்தம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, "அந்த வீடியோவை தயாரித்தவர்கள் யாரென்று தெரியாது. அண்ணாவின் பெருமைகள் பல இருக்கின்றன. அடித்தட்டு மக்களை அரசியல் அதிகாரத்திற்கு கொண்டு வந்த தலைவர்களில் முதன்மையானவர் அண்ணா. பெரியாரின் சீர்திருத்த கருத்துகள் ஏராளமாக இருக்கின்றன.
அண்ணாவின் பேச்சும், நடையும், எழுத்தும், செயலும் சிலரது மனதை புண்படுத்தி இருக்கலாம். அதனுடைய வெளிப்பாடாக அந்த வீடியோ அமைந்திருக்கலாம். அண்ணா இருந்ததன் காரணத்தினால் தான் சாமானிய மக்களும் சட்டமன்றத்தில் அமர முடிந்தது.
ஒரு நிகழ்ச்சியில் நடைபெற்ற 99 சதவீத நல்ல நிகழ்வுகள் குறித்து மட்டும் நாம் பேசுவோம். அதில் நடந்த இத்தகைய ஒரு நிகழ்வை மட்டும் பேசி, முருக பக்தர்கள் மாநாட்டின் ஒட்டுமொத்த நல்ல கருத்துகளை நாம் புறக்கணிக்க முடியாது.
அண்ணா குறித்து இடம்பெற்ற வீடியோ வருத்தம் அளிக்கிறது. அந்த வீடியோவை தவிர்த்திருக்கலாம். இன்றைய அரசியல் சூழலில் மறைந்த தலைவர்களின் நல்ல பண்புகள் குறித்து பேசுவது மட்டுமே சிறப்பாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.