Rajendra Balaji Speech Video: ராஜேந்திர பாலாஜி... தமிழக அமைச்சர்களில் தினம் ஒரு அதிரடி பேச்சை ரிலீஸ் செய்து கொண்டிருப்பவர். லேட்டஸ்டாக அவரது உரை, திமுக தலைமையை டி.ஜி.பி.யிடம் புகார் செய்ய வைத்திருக்கிறது.
ராஜேந்திர பாலாஜி அப்படி என்ன பேசினார்?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக.வினர் தைரியமாக செயல்பட வேண்டிய அவசியம் குறித்து உரையாற்றினார். ஒரு கட்டத்தில், ‘திமுக.வினர் உங்க வீட்டுக் கதவைத் தட்டினார், அவங்ககிட்ட நியாயம் கேட்டுகிட்டு இருக்கக்கூடாது. முதல்ல அவங்க வீட்டுக் கதவை உடைச்சுட்டு, அப்புறம் பேசுவோம்.
அதுல என்ன வந்தாலும், எது வந்தாலும் நான் பாத்துக்கிறேன். பின்னணியா முழுக்க முழுக்க நான் இருப்பேன். வேற யாரு மாதிரி சொல்லிட்டு ஓடப் போறவன் கிடையாது. ஜெயிக்கிறதுக்கு என்னென்ன சித்து வேலை இருக்கோ, அத்தனையையும் செய்வோம்’ என உசுப்பேற்றினார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு கட்சிக்காரர்களை உசுப்பேற்றியிருக்கலாம். ஆனால் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி, ‘ஒரு அமைச்சரே இப்படி சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க உத்தரவு பிறப்பிப்பது போல பேசலாமா? என விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
இதற்கிடையே இன்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக டிஜிபி-ஐ சந்தித்து, வன்முறையை தூண்டும் விதமாக பேசிய ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை கோரி மனு கொடுத்தார். ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.