ADMK Minister K T Rajendra Balaji Tamil News: கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக பணியாற்றியவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. தற்போது விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வரும் இவர், அமைச்சராக பணியாற்றியபோது ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டு வழக்கு பதிவும் செய்யப்பட்டது.
இந்நிலையில், தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் அவரை கைது செய்யலாம் என தெரிவித்தது. இதனையறிந்த, ராஜேந்திர பாலாஜி உடனே தலைமறைவாகி விட்டார்.

எனவே, அவரைத் தேட 8 தனிப்படைகள் அமைத்த போலீசார், தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். தமிழகத்தின் மதுரை, கோவை, கொடைக்கானல் போன்ற முக்கிய நகரங்களிலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் தனிப்படை விரைந்துள்ளது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு “லுக்-அவுட்” நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராஜேந்திரபாலாஜி தன்னை ஏமாற்றி விட்டதாக தொடர்ந்து பலரும் போலீசில் புகார்கள் கொடுத்து வரும் நிலையில், அவர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவில் தற்போது 7க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி யார் யாரிடம் எவ்வளவு லஞ்ச பணம் வாங்கினார் என்கிற பட்டியலை, அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அவர், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் ரூ.30 லட்சம், இரா.முருகன், க.முருகன், இளங்கோ, பரமசிவம் ஆகியோர் ரூ.1.60 கோடி, ஹரிபாலு ரூ.5.20 லட்சம், கார்த்திக்குமார் ரூ.16 லட்சம், மதுரை கோமதிபுரம் 5-வது தெருவைசேர்ந்த செல்வராஜ் ரூ.16 லட்சம், திருவில்லிபுத்தூர் பாப்பா அங்குராஜ் நகரில் வசிக்கும் வெங்கடாசலம் ரூ.10 லட்சம் என ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்துள்ளனர்.
இதேபோல், சிவகாசி சித்துராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த குணா தூயமணி ரூ.17 லட்சம், மதுரை வில்லாபுரம் காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் ரூ.7 லட்சம், நெய்வேலி அலங்கரைச்சாமி மகன் ஜோசப்ராஜ் என்பவர் ரூ.7.50 லட்சம் தந்துள்ளனர். இவற்றை சாத்தூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி உள்ளிட்ட கட்சி பிரமுகர்களிடமும், ராஜேந்திர பாலாஜியிடமும் நேரடியாக தந்துள்ளனர் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“