திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தில் தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அ.தி.மு.க பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பெயரில் நாங்கள் மரியாதை செலுத்தியதாக குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:-
தென்னிந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் என அனைவராலும் அழைக்கப்பட்ட முதுபெரும் திரைப்பட நடிகர் மறைந்த தியாகராஜ பாகவதர் மணி மண்டபத்தை சட்டமன்றத்திலேயே அறிவித்து அவருக்கு முழு திருஉருவ சிலை அமைத்துக் கொடுத்தது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசுதான்.
அ.தி.மு.க-வை யாரும் பலவீனப்படுத்த முடியாது. கட்சியை விட்டு சென்றவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் வேறு கட்சியுடன் இருந்து கூட்டணியில் போட்டியிட்டவர்கள் அ.தி.மு.க-வையோ, இரட்டை இலையையோ அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. இதற்கு தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட், அ.தி.மு.க தொண்டர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். கட்சிக்கே தொடர்பு இல்லாதவர்கள் கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் தேர்தலில் வேறு சின்னத்தில் நின்றவர்கள். கட்சியில் மீண்டும் சேர வேண்டுமென்றால் அ.தி.மு.க பொதுச்செயலாளிடம் கடிதம் கொடுத்து அவர் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்வார்.
2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சி அ.தி.மு.க கிளைக் கழகம் முதல் பட்டி தொட்டிகள் அனைத்திலும் அ.தி.மு.க தொண்டர்கள் உள்ளனர். அ.தி.மு.க கட்சியுடன் எந்த கட்சியும் போட்டி போட முடியாது.
சீமான் வீட்டில் போலீசார் முன்னாள் ராணுவ வீரரை கைது செய்தது சர்வாதிகாரமானது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான், அ.தி.மு.க அதை ஆதரிக்கிறது, இந்தி வேண்டுமென்றால் படித்துக் கொள்ளலாம், திணிக்கக் கூடாது.
தி.மு.க. ஆட்சி செய்த 4 ஆண்டு காலத்தில், 9 லட்சம் கோடி கடன் உள்ளது. தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கான லேப்டாப் உள்ளிட்ட திட்டங்கள் ரத்து செய்ததன் மூலம் தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு போக போகிறது, அ.தி.மு.க ஆட்சிக்கு வரப்போகிறது. 2026-ல் அ.தி.மு.க பொதுச்செயலாளர் வெற்றி கூட்டணி அமைப்பார். சிறுபான்மை, பெரும்பான்மை உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் ஏற்ற வெற்றி கூட்டணியாக அமையும்.
இவ்வாறு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்