ராமர் - பெரியார் - ரஜினிகாந்த்; 1971 சேலம் மாநாட்டில் நடந்தது என்ன?

உண்மையில், பெரியார் 1971-இல் சேலத்தில் நடத்திய திராவிடர் கழகத்தின் பேரணியில் என்னதான் நடந்தது? இரு தரப்பினரும் முன்வைக்கும் வரலாற்றில் பதிவான பதிவுகள் என்ன? என்பதை இந்த...

துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, 1971-இல் திராவிடர் கழகம் சேலத்தில் நடத்திய பேரணியில் நிர்வானமான ராமர், சீதை சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது என்றும் அதற்கு செருப்பு மாலை போடப்பட்டு அவமதிக்கப்பட்டது என்றும் கூறினார். இதனை பத்திரிகை ஆசிரியர் சோ தனது துக்ளக் பத்திரிகையில் வெளியிட்டார். அதனால், தமிழக அரசு பத்திரிகை யார் கைகளிலும் கிடைத்துவிடக் கூடாது என்று தடை செய்ததாகவும் ஆனால், சோ மீண்டும் பத்திரிகையை அச்சடித்து வெளியிட்டார். அந்தப் பத்திரிகை பிளாக்கில் விற்பனையானது என்று கூறினார். அதுமட்டுமில்லாமல், ஒருவன் கையில் முரசொலி வைத்திருந்தால் திமுககாரன், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லிவிடலாம் என்று பேசினார்.

ரஜினியின் இந்தப் பேச்சு பெரிய சர்ச்சயை ஏற்படுத்தியது. சேலம் மாநாட்டில், ரஜினி கூறியது போன்ற சம்பவம் நடைபெறவில்லை. அந்த நிகழ்வை ரஜினி தவறாக மாற்றி சொல்கிறார் என்று கூறிய திராவிட இயக்கத் தலைவர்கள் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியொர் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “பெரியார் குறித்து நான் கூறியது சர்ச்சையாகி இருக்கிறது. நான் கூறியது தவறானது இல்லை. 1971-இல் சேலம் திக பேரணி சம்பவம் பற்றி ஹிந்து குரூப்பில் இருந்து வரும் அவுட்லுக் பத்திகையில் செய்தி வெளிவந்துள்ளது. அதனால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று கூறினார்.

ரஜினிகாந்த் தான் கூறியதற்கு அவுட்லுக் பத்திகையின் ஆதாரம் காட்டியதோடு மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

1971-இல் சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி பற்றி ரஜினி காட்டிய ஆதாரம் ரஜினி ஆதரவாளர்கள் உண்மையென்றும் அவர் காட்டிய ஆதாரம் தவறானது; ரஜினியின் பேச்சில் நிறைய முரன்பாடுகள் உள்ளன என்று திராவிட இயக்கத்தவர்களும் பெரியாரிஸ்ட்களும் முற்போக்காளர்களும் வாதிட்டு வருகின்றனர்.

உண்மையில், பெரியார் 1971-இல் சேலத்தில் நடத்திய திராவிடர் கழகத்தின் பேரணியில் என்னதான் நடந்தது? இரு தரப்பினரும் முன்வைக்கும் வரலாற்றில் பதிவான பதிவுகள் என்ன? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.


திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு காணொலியில், “துக்ளக் ஏட்டின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினி உரையாற்றுகிறபோது, 1971-ம் ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநட்டுப் பேரணி குறித்து சில தவறான தகவல்களை பதிவு செய்துள்ளார். அவர் ராமர், சீதை படங்கள் உடைகள் இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து எடுத்து வரப்பட்டது. அதை யாரும் வெளியிட தயங்கியபோது சோதான் துணிச்சலாக வெளியிட்டார். அதனால், 10 ரூபாய் விற்கக்கூடிய அந்த பத்திரிகை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. 10 ரூபாய்க்கு விற்கும் அந்த பத்திரிகை 50 ரூபாய்க்கு பிளாக் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது. அதன் மீது கடும் எதிர்ப்புகள் வந்த பின்னால், அவர் அளித்த பேட்டியில், ஹிந்து குரூப்பைச் சேர்ந்த அவுட்லுக் பத்திகையில் 2017 ஆம் ஆண்டு வெளியான செய்தியில் அதற்கான ஆதாரம் இருப்பதாக செய்தியாளர்களிடம் மந்திரவாதியைப் போல வேகமாகக் கையாட்டிக் காட்டிவிட்டு பையில் வைத்துக்கொள்கிறார். அதில் அது குறித்த பதிவுகள் இருக்கிறது என்று கூறுகிறார்.

1971-ம் ஆண்டு நடந்த மூடநம்பிக்கை பேரணியில், ராமர் உருவம் எடுக்கப்பட்டது உண்மைதான். செருப்பால் அடிக்கப்பட்டதும் உண்மைதான். ஆனால், இதை எப்படி பார்க்க வேண்டும் என்பதை சொல்கிறேன். அப்போது திமுக ஆட்சியில் இருந்த காலம். பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலம் என்ன செய்தியைத் தாங்கிவரும் என்றே தெரியாது அவர்களுக்கு. ஆனாலும், மூடநம்பிக்கை ஒழிப்பு என்பது ஏதோ இந்து மத விரோத செயல் என்பதைப் போல, அப்போது, ஆலயப் பாதுகாப்பு கமிட்டி என்ற பெயரால் ஒரு அமைப்பு சேலத்தில் இருந்தது. அவர்கள்தான் இப்போது இருக்கிற பாஜகவின் முந்தைய பிறவியான பாரதீய ஜனசங்கத்தின் உறுப்பினர்கள். இந்து மர்மச்சேத்திர என்று ஒரு பத்திரிகைகூட அவர்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த ஊர்வலத்திற்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு அனுமதி கேட்கிறார்கள். இப்போதெல்லாம் அது குறித்து நினைத்தே பார்க்க முடியாது. ஊர்வலம் நடக்காதபோதே கருப்புக்கொடி காட்ட முடியாது. ஆனால், பெரும் திரளாக மக்கள் கூடிவருகிற மாநில மாநாட்டு ஊர்வலத்தில் கருப்புக்கொடி காட்டுவது என்பதை இப்போதைய அரசு எல்லாம் ஏற்றுக்கொள்ளுமா என்று எண்ணிப் பாருங்கள். ஆனால், திமுக அரசு அதற்கான அனுமதியை அளித்தது. அது சேலம் தீயணைப்பு நிலையத்திற்கு சற்று முன்னதாக எதிர்புறத்தில் நின்று ஒரு 50 பேர் அவர்கள் கருப்புக்கொடி காட்டினார்கள்.

பெரியார் தலைமையில் அந்த மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி நடக்கிறது. பேரணி மீது ஒரு செருப்பு எடுத்து வீசப்படுகிறது. விழுந்த செருப்பு ராமர் படம் எடுத்துச் சென்ற வண்டியின் அருகில் விழுகிறது. உடனே அந்த செருப்பை எடுத்து தோழர்கள் ராமர் படத்தை செருப்பால் அடித்தார்கள் என்பது உண்மைதான். இது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியோ அல்லது இப்படி அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டோ வந்ததோ அல்ல. வீசப்பட்ட செருப்பை எடுத்து அடித்தார்கள். அது குறித்து விமர்சனம் வைப்பவர்கள். இதில் முதல்வினையே செருப்பு வீசியதுதான். அதற்கு எதிர்வினைதான் அந்த செருப்பை எடுத்து அடித்தது. நாணயப் பொருப்புடன் பேச வேண்டும் என்றால் அவர்கள் முதல்வினையையும் பேச வேண்டும். எதிர்வினையையும் பேச வேண்டும். அது முதலில் ரஜினி செய்த பிழைகளில் ஒன்றாக நான் பார்க்கிறேன். அடுத்து ஊர்வலத்தில் எடுத்து வந்த படங்கள் ராமரும் சீதையும் உடையில்லாமல் எடுத்து வரப்பாட்டார்கள் என்பது அப்பட்டமான பொய். அவர்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்பதும் அப்பட்டமான பொய். துக்ளக் இதழ் 40 காசுக்குதான் விற்கப்பட்டது. இவர் கூறுவதைப் பொல 10 ரூபாய்க்கு விற்கப்படவில்லை. 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்றும் பறிமுதல் செய்யப்பட்டதால் 50 ரூபாய்க்கு கள்ள மார்க்கெட்டில் விற்கப்பட்டது என்பது பெருமைப்பட்டுக்கொள்கிற செயல் அல்ல. இது ரஜினிகாந்த் சொல்கிற சிஸ்டம் சரியிலை என்று சொல்வதற்கு சரியான எடுத்துக்காட்டு. 50 ரூபாய்க்கு விற்றதை ரஜினி பெருமைபடக் கூறுகிறார்.

அதற்கு எதிர்வினை வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, இதோ பாருங்கள் நான் கையில் வைத்திருப்பது. அவுட்லுக் ஏடு ஹிந்து குரூப்பின் ஏடு என்று சொல்கிறார். 2017 ஆம் ஆண்டு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அந்த படங்கள் நிர்வானமாக ஊர்வலம் எடுக்கப்பட்டதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள் என்று அவர் சொல்லி எடுத்துவந்த அந்த ஏட்டின் படியை அல்ல. அதனுடைய நகலைக் கொண்டுவந்து காட்டுகிறார். அவர் நாணயப் பொறுப்பு உள்ளவராக இருந்திருந்தால் அந்த நகலை எல்லா செய்தியாளர்களுக்கும் விநியோகித்திருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை. அதை ஊடகத்தினர் தங்கள் கேமிராவில் ஜூம் செய்து எடுத்துக்கொள்ளும் அளைவில் நிறுத்தி நிதானமாக காட்டியிருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை. ஏதோ மந்திரவாதி மேஜிக் செய்பவர் காட்டுவதைப் போல, வேகமாக கையாட்டிவிட்டு மறைந்து கொள்கிறார். அவ்வளவுதான்.

இதில் உள்ள பொய்களையும் நான் சொல்லிவிட வேண்டும். ஒன்று அவுட்லுக் என்கிற ஏடு ஹிந்து குரூப்பில் இருந்து வெளிவரவில்லை. அவர் பொய்யாக ஹிந்து குழுமத்தில் இருந்து வருகிற பத்திரிகை என்று சொல்கிறார். இது முதல் பொய். அவர் காட்டிய நகல் 2017-ம் ஆண்டு வந்தது. இவர் பேசியது துக்ளக்கின் 50-ம் ஆண்டுவிழாவில், பேசியதை, அவர் நாணயப் பொறுப்புள்ளவராக இருந்திருந்தால், துக்ளக் பத்திகையின் ஆவணக் காப்பகத்தில் இருந்து அந்த செய்தி வெளியான பத்திரிகையை எடுத்துவந்திருந்து காட்ட வேண்டும். ஆனால், அதை செய்யாமல், 2017-ம் ஆண்டு வந்ததைக் காட்டி அது எழுத்தாக வந்திருக்கிறதா? அல்லது படமாக வந்திருக்கிறதா என்று காட்டாமல் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கூறுகிறார். மன்னிப்பு கேட்பது என்பது அவமானமான செயல் அல்ல. தவறு என்று புரிந்துகொண்டால் அதற்காக மன்னிப்போ வருத்தம் தெரிவிப்பதோ மனிதநேயமுள்ள மனிதப் பன்பு உள்ளவர்களின் கடமைகளில் ஒன்றாகும். அதுகூட உரிய காரணம் இருந்தால் மறுக்கலாம். அதற்கு காரணம் இல்லை. துக்ளக் ஏட்டில் வரவில்லை என்பதையும் அவர் சொல்லவில்லை. இது யோக்கியன் செய்கிற செயல் அல்ல.

துக்ளக் நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நான் இப்போது அரசியலுக்கு வெளியே இருக்கிறேன். ரஜினி அரசியலுக்கு வர உள்ளார் என்று கூறினார். ரஜினிகாந்த் பாஜகவுக்கு வர இருக்கிறார் என்பதை சூசகமாக சொன்னாரோ என்று தெரியவில்லை. ஆனால், பாஜகவின் உறுப்பினராக இருக்கும் அளவுக்கு பொய், பித்தலாட்டம், ஆணவம் அனைத்தும் அவருடைய போக்கில் காணப்படுகிறது என்பதை இப்போது சொல்ல விரும்புகிறேன்.

எஸ்.வி.சேகர் பெண்களைப் பற்றி சொன்னார். மன்னிப்பு கேட்க மறுத்தார். இப்படிப்பட்ட ஆணவமான பேச்சுகளும் பிடிவாதமாக இருக்கின்ற மனித தன்மையற்ற செயலும் பாஜகவின் சொத்துக்கள் ஆகும். அதைத்தான் ரஜினியும் காட்டியிருக்கிறார். பாஜகவில் உறுப்பினராவதற்குரிய முழு தகுதியும் வந்துவிட்டது என்பதுதான் அவருடைய நேர்காணல் நமக்கு சொல்ல வருகிறது. அவரை பாஜக தலைவர்கள் நீங்கள் தலைமை ஏற்க வரவேண்டும் என்று வருந்தி வருந்தி கேட்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் அவர் இப்படி செய்திருக்கிறார்.

இதில் நான் பார்ப்பது அவர் துக்ளக் ஏட்டை அவர் பார்த்ததே இல்லை. அது வந்தது 1971-ம் ஆண்டில். இவர் தமிழ்நாட்டுக்கு 1975-இல் அபூர்வ ராகங்கள் படம் நடிக்க வந்தார். அதற்கு முதல் ஆண்டில் இங்குள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்திருந்தார். அப்போது இவருக்கு தமிழ் தெரிந்திருக்குமா என்று தெரியாது. உண்மையாக திரைப்படத்துறைக்கு வந்திருந்தாலும்கூட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த செய்தி இவருக்கு தெரிந்திருக்காது. யாரோ ஒருவர் சொல்லித்தான் அவர் துக்ளக் ஆண்டுவிழாவில் அவர் பேசியிருக்கிறார். இது அவருடைய குரல் அல்ல. துக்ளக் ஏட்டைக்கூட பார்க்கததால்தான் அவர் அவுட்லுக் ஏட்டை எடுத்துக்காட்டுகிறார். அவருக்கு பேச உரிமை உண்டு. ஆனால், அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இது சரியானது அல்ல. அவர் துக்ளக் ஏட்டை காட்டியிருக்க வேண்டும். துக்ளக் விலையைப் பற்றியும் காட்டியிருக்கலாம். அது அதிக விலைக்கு விற்றதை காட்டியிருக்கலாம். நிகழ்ச்சி நடந்து 46 ஆண்டுகள் கழித்து வந்த பத்திகையை காட்டியும் காட்டாமலும் சொல்லியிருப்பது பூசி மெழுகப் பார்க்கிறார்.

இது மக்கள் மத்தியில் உருவாக்கி வைத்திருக்கிற பிம்பத்துக்கு நேர் எதிரானவர். இவர் ஏதோ தன்னை நாணயஸ்தனைப் போலவும் அப்பாவியைப் போலவும் காட்டிக்கொள்கிறார். இவர் நாணயமானவரும் இல்லை. அப்பாவியும் இல்லை. திட்டமிட்டு பொய்யை அழுத்தமாகப் பேசுகிற ஆற்றல் உள்ள ஒருவர் என்ற போக்கைத்தான் காட்டுகிறது. உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்புகிற, பாஜகவின் வேலைத்திட்டத்துக்கு உடன்பட்டு போகிற செயல்” என்று கூறினார்.


அதே போல, இந்த சர்ச்சை விவகாரம் குறித்து பத்திரிகையாளர் ஷபீர் அஹமது தனது டுவிட்டர் பக்கத்தில், சோ துக்ளக் இதழில் எழுதிய காலண்டர் கூறும் கதை சேலம் விவகாரம் என்ற பக்கங்களின் புகைப்படங்களை டுவிட் செய்துள்ளார். அதில், சேலம் மாநாட்டு பேரணி குறித்து தினமணியில் வெளியான செய்திகளைக் குறிப்பிட்டு சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, ஊடகவியாளளர் பாரத் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 1971-ம் ஆண்டு தி.க. ஊர்வலம் பற்றி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், திமுக அரசின் பாதுகாப்புடன் சேலத்தில் நடத்தப்பட்ட தெய்வநிந்தனை ஊர்வலக் காட்சிகள் இவைதான் என்று ஊர்வலத்தில் இடம்பெற்ற புகைப்படங்கள் இடம்பெற்ற ஒரு பதிவை டுவிட் செய்துள்ளார்.


எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன், தனது டுவிட்டர் பக்கத்தில், 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு பேரணியையொட்டி நடைபெற்ற சம்பவங்களையும் துக்ளக் தடைசெய்யப்பட்டது பற்றியும் ஊர்வலத்தில் இடம்பெற்ற படங்கள் பற்றியும் புகைப்படம் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி இதழ் செய்தி வெளியிட்டுள்ளதை டுவிட் செய்துள்ளார்.


ரஜினி விவகாரம் சர்ச்சையானது குறித்து இந்த வார துக்ளக் பத்திரிகையில் துர்வாசர் என்ற பெயரில் ரஜினிக்கான மறுப்பு உண்மையா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில், சேலம் பேரணியில் இடம்பெற்ற சித்திரம் என்று ஒரு புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலும், தி.க.வினர் இந்துக்களை மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களையும் அவமதித்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close