கஜ புயலின் தாக்கத்தினால் சின்னாபின்னமாகிப் போயிருக்கிறது டெல்டா மாவட்டங்கள். வீடுகள், நிலங்கள், தோப்பு, ஆடு, மாடு என மக்களின் அவசிய அன்றாட தேவைகள் அனைத்தும் நாசமாகி உள்ளது. முடிந்த வரை அரசும் துரிதமாக செயல்பட்டாலும், பாதிக்கப்பட்ட பல இடங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது என்பதே உண்மை. குறிப்பாக, பல கிராமங்கள் கஜ புயலின் தாக்கத்தில் இருந்து சிறிதும் மீளவில்லை.
பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணியை தற்போது அரசு செய்து வருகிறது. அவை அனைத்தும் கணக்கிடப்பட்டு, தலைமைக்கு அனுப்பப்பட்டு, அதன் பின் இன்னென்ன பாதிப்படைந்தவர்களுக்கு இன்னென்ன நிவாரணம் என்று அரசு முடிவெடுத்து, அது கைக்கு வந்து சேருவதற்குள் மக்களின் நிலை இன்னும் மோசமாகிவிடும்.
ஆகையால், அரசின் உதவிகளை எதிர்பார்க்காமல், கை காசுகளை போட்டும், தன்னார்வலர்கள் உதவியுடனும் தங்களது பாதிப்படைந்த பகுதிகளை மக்களே சரி செய்து வருகின்றனர். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து உதவிகள் திரட்டப்பட்டு வருகிறது.
ஆனால், 2015ல் சென்னையை வர்தா புயல் தாக்கிய போது, அள்ளிக் கொடுத்த டெல்டா மக்களுக்கு, இப்போது அவர்களுக்கு அது போன்ற கஷ்டம் என்று வரும் போது, உதவிகள் வந்து சேருகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 'தமிழகத்தில் ஏதோ ஒரு பகுதியில் பாதிப்பு' என்று நகரவாசிகள் நினைத்து அமைதியாக இருப்பதாக சமூக தளங்களில் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். RBSI எனும் ரஜினி ரசிகர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "2.0 பட கொண்டாட்டத்திற்காக (பேனர், வானவேடிக்கை, சென்னையில் நல உதவி) வைத்திருந்த சேமிப்பை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களாக அனுப்ப உள்ளோம். நம்மை நல்வழியில் நடத்தி செல்லும் தலைவர் ரஜினிக்கு என்றும் அன்புடன்!" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்கள் அவதிப்படும் இந்த நேரத்தில், கொண்டாட்டத்திற்கு வைத்திருந்த பணத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்ய இருப்பதாக ரஜினி ரசிகர்கள் அறிவித்திருப்பது உண்மையில் வரவேற்கக்கூடியது.