ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்பினால் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விரும்பும் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்கான முதற்கட்டபணிகளில் ஈடுபட்டு வந்தார். இதனால் தமிழகத்தில் பெரும் அரசியல் பரபரப்பு நிலவி வந்த நிலையில், ரஜினி கட்சி தொடங்கினால் வாக்கு பிரியும், என்றும், இது திமுகவிற்கு பாதகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும் ரஜினி கட்சி தொடங்கினால் அந்த கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்றும் கூறப்பட்டது.
இதனால் திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கட்சி தொடங்குவதற்குள் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை முடிக்க ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த், அங்கு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் திடீரென தான் கட்சி தொடங்கும் அறிவிப்பை வாபஸ் பெருவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/01/rajini-733x1024.jpeg)
ரஜினிகாந்தில் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில், திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால் ரஜினியின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளாத அவரது ரசிகர்கள் அவரை அரசியலுக்கு இழுக்கும் முடிவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைதியான முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் ரஜினி தனது முடிவில் இருந்து மாறிவில்லை.
இதனையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் வேறு கட்சிகளில் இனைந்து வருகின்றனர். இதில் நேற்று தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ. ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே செந்தில் செல்வனாத் , தேனி மாவட்டச் செயலாளர் ஆர். கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கே. வி. எஸ். சீனிவாசன் ஆகியோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், அவர்கள் விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து தங்கள் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, அவர்கள் விரும்பும் எந்த கட்சியிலும் இணைந்துகொள்ளலாம். அதேசமயத்தில் அவர்கள் எந்த கட்சியில் இணைந்தாலும் அவர்கள் ரஜினி ரசிகர்கள் என்பதை மறக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"