நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10.45 மணியளவில் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம், மாநில நிர்வாகி சுதாகர் உட்பட 6 ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 32 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர்களை அதிக அளவில் மன்றத்தில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. குறிப்பாக கட்சியின் கட்டமைப்பு மற்றும் ரசிகர் மன்றத்தை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தின் புகைப்படத்தை ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
,
மேலும் விரைவில் நடைபெற இருக்கும் மாநாடு குறித்து அவர் அறிவிப்பார் என்று ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த மாநாடு பெரும்பாலும் கோவையில் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.