Rajini returned home and shares an audio viral Tamil News : கடந்த 25-ம் தேதி டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விருது விழாவில் தாதாசாகெப் பால்கி விருதினை பெற்றதை அடுத்து, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர், தான் நலமாக இருப்பதாக ஆடியோ பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய விழாவை முடித்துக்கொண்டு சென்னை வந்தடைந்த ரஜினிகாந்த், தன்னுடைய குடும்பத்தினருடன் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் தான் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, 28-ம் தேதி திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதனால் உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி.
தொடர் பரிசோதனையில் அவருக்கு மூளைக்குச் செல்லும் கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து, அந்த அடைப்பையும் சரிசெய்தனர். ரஜினிக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவருடைய உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கூர்மையாகக் கண்காணித்து வந்தனர்.
ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். மேலும், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று ரஜினிகாந்தின் உடல்நிலையை விசாரித்தார். இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனையிலிருந்து ரஜினிகாந்த் வீடு திரும்பியுள்ளார். அவர் காரிலிருந்து இறங்கி நடந்து வரும் வாயிலில் ஆரத்தித் தட்டுடன் காத்திருந்தார் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த். பிறகு, ஆரத்தி எடுத்து வீட்டினுள் வரவேற்றார். ரஜினியுடன் அவருடைய இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இருந்தார்.
இதனை அடுத்து வீடு திரும்பிய ரஜினி, "அனைவருக்கும் வணக்கம், சிகிச்சை முடிந்தது. நான் நல்லா இருக்கேன். இன்று இரவுதான் வீட்டுக்கு வந்தேன். நான் நலமுடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்த நல் உள்ளம் கொண்ட ரசிக பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் உடல் நலம் குறித்து விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி" எனத் பதிவு செய்த ஆடியோவை வெளியிட்டுள்ளார். இது ரஜினியின் உடல்நலம் சம்பந்தப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.