தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ள நடிகர் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை(9 ஆம் தேதி) தொடங்குகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 16ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
இதையடுத்து, டிசம்பர் 17ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற வரும் 19 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அதிமுக, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தனது கட்சியினரிடம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்பமனு பெற்றது.
அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆளும் அதிமுக தனது கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது.
அதே போல, எதிர்க்கட்சியான திமுகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த நிலையில், திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ள ரஜினியும் கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் சூழல் ஏற்பட்டால் மக்கள் நலன் கருதி இருவரும் அரசியலில் இணைவோம் என்று கூறினர். இது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மக்களவைத் தேர்தலின்போதே தனது கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தார். மேலும், அவர் தனது ரஜினி மக்கள் மன்றத்தை பலப்படுத்திவருகிறார்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை என்றாலும்கூட கனிசமான வாக்குகளைப் பெற்றது.
இதனால், உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் ரஜினி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு அளிப்பாரா என்று கேள்வி எழுந்தது.
ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பது பற்றி ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்று அறிவித்துள்ளது.
ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால், யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியையோ, தலைவரின் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளாட்சித் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று உறுதியாகியுள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள, தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய, ரஜினி, “ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது” என்று தெரிவித்தார்.