வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்! ஆடிட்டர் குருமூர்த்தி நம்பிக்கை

தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. அதை ரஜினியால் நிரப்ப முடியும். ரஜினிக்கு மக்களிடம் ஆதரவு உண்டு. ரஜினி, கமல் இருவரில் ரஜினிதான் ஆட்சிக்கு வருவார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என ஆடிட்டரும், பத்திரிகையாளருமான எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய தொழில்துறை வர்த்தக கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. அதை ரஜினியால் நிரப்ப முடியும். ரஜினிக்கு மக்களிடம் ஆதரவு உண்டு. மோடிக்கு ஆளுமை உண்டு. ரஜினி, கமல் இருவரில் ரஜினிதான் ஆட்சிக்கு வருவார். ரஜினிக்கு நான் ஆலோசகராக இருக்கிறேன் என்பதில் உண்மை இருந்தால் எனக்கு பெருமை தான்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “காவிரி பிரச்னை கர்நாடக தேர்தலுக்கு பிறகு தான் முடிவடையும். காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக தேர்தலுக்கு முன் அமைத்தால் கர்நாடகாவில் வன்முறை ஏற்படும். அது தமிழகத்திற்கு நல்லதல்ல. நிச்சயமாக காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கே சாதகமான முடிவு கிடைக்கும்.

கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என நம்புகிறேன். மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. ஜூன் மாதம் தான் நீர் பகிர்வு தேவை. தமிழகத்தில் போராட்டம் நடத்த ஏதேனும் பிரச்சனை கிடைக்குமா? என எதிர்க்கட்சிகள் யோசித்து வருகின்றன. நீட் தேர்வு குறித்து அரசியல் கட்சிகள் படிக்க வேண்டும். நீட் குறித்து முழு புரிதல் யாருக்கும் இல்லை என்பதால் தான் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 3 வருட ஆட்சி உண்டு. இன்னொரு அரசு அமைப்பதாக இருந்தால் தான் ஆட்சி கவிழும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருடைய செயல்பாடு என்று ஒன்று இல்லை. கூட்டணி ஆட்சி வந்தால் தமிழகத்திற்கு குழப்பம் ஏற்படும்.

கூட்டாட்சி குறித்து ஏற்கனவே பலர் பேசியிருக்கிறார்கள். மோடியை வீழ்த்த வேண்டும் என ஒன்று கூடினால் அது நடக்காது. நாடாளுமன்ற தேர்தலுக்காக மூன்றாவது அணி அமைந்தால் அது பாஜகவிற்கு உதவியாக இருக்கும்.

ஜி.எஸ்.டி மீதான கருத்து வேறுபாடு குறித்து பதிவு செய்திருந்தேன். பணமதிபிழப்பு நடவடிக்கை நல்லது தான். இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கும்’’ என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close