தேர்தல் நடந்தால் ரஜினிக்கு 150 இடங்களா? அவரே அளித்த பதில்

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்காக மக்கள் மன்றம் நிர்வாகிகளைச் சந்தித்து பேசி வருகிறார். இதன் அடுத்த கட்டமாக, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றம் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மக்கள் மன்றத்தில் முக்கிய பங்காற்றும் மகளிர் அணி நபர்கள் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்.

rajini makkal mandram women wing

இந்தக் கூட்டத்தின் முடிவிற்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கர்நாடக தேர்தல் முடிவு, குமாரசாமி பதவியேற்பு, காவிரி விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவை அனைத்திற்கும் பதிலளித்த ரஜினிகாந்த், “கர்நாடகத்தில் குமாரசாமிக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி. எடியூரப்பாவிற்கு பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கெடு அளித்தது தவறு. ஆனால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது.” என்றார்.

மேலும் காவிரி விவகாரத்தில் கமல் ஹாசன் அழைப்பு விடுத்தும் தான் பங்கேற்காதது குறித்து கேட்டதற்கு, “அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார் ஆனால் நாங்கள் இன்னும் கட்சியே துவங்கவில்லை எனவே தான் பங்கேற்க முடியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அழைப்புகள் வரும்போது நிச்சயம் பங்கேற்போம். காவிரி பிரச்சனையில் கமல் ஹாசனின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.” என்றும் கூறினார்.

இறுதியாகக் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு மற்றும் மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் குறித்துக் கேட்டதற்கு, “காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றியே ஆக வேண்டும். அது அவர்களின் கடமை. மேலும் காவிரி விவகாரத்தில் அதிகாரம் ஆணையத்திடம் இருப்பது நல்லது என்றே நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘சட்டமன்றத் தேர்தல் நடந்தால், உங்களுக்கு 150 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை கணித்திருக்கிறது என செய்திகள் வந்திருக்கிறதே?’ என ரஜினிகாந்திடம் கேட்டார்கள். அதற்கு ரஜினிகாந்த், ‘அப்படி கிடைத்தால் மகிழ்ச்சி’ என்றார்.

இந்தச் சந்திப்பின் முடிவுல் விரைவில் கட்சி துவங்கப்படும் என்றும், இனி வரும் காலத்தில் அனைத்தையும் சந்திக்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

×Close
×Close