2 Point O , Viswasam Ticket Sale: நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள 2.o, பேட்ட, அஜீத் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படத்துக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2017 கொண்டுவரப்பட்ட அரசாணையில் திரையரங்குகளில் வாகன கட்டணம், மாநகராட்சியை பொறுத்தவரை கார் மற்றும் இருசக்கர வாகனத்துக்கு 20 ரூபாயும், நகராட்சிகளில் 15 ரூபாயும், ஊராட்சிகளில் 5 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் 200 ரூபாய்க்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திரையரங்க கட்டணத்தை பொறுத்தவரை மல்டிபிளெக்ஸ் திரையரங்கில் ஏ.சி கட்டணமாக குறைந்தது 50 ரூபாயும், அதிகபட்சமாக 150 ரூபாயும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குறைந்தது 40 ரூபாயும், அதிகபட்சமாக 100 ரூபாயும், ஏ.சி இல்லாத அரங்கத்துக்கு 80 வரையும், கிராமபுரங்களுக்கு ஏ.சி யாக இருந்தால் 75 ரூபாயும், ஏ.சி இல்லாத அரங்கத்துக்கு 50 ரூபாய் வரை அரசால் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எந்த திரையரங்கமும் இதை தற்போது கடைப்பிடிப்பது இல்லை.
இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2.o படமும் தொடர்ந்து, பேட்ட படமும், அதனையாடு அஜித்தின் விஸ்வாசம்" உள்ளிட்ட படங்கள் வெளிவர உள்ளது. பெரும் செலவில் வெளியாக உள்ள இந்த படங்களுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படவும், கூடுதல் காட்சிகளை திரையிடவும் வாய்ப்புள்ளது. அதனால் நீதிமன்றம் தலையிட்டு அரசு உத்தரவை பின்பற்றாத திரையரங்கம் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பிறப்பித்த அரசாணையை ஏன் அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை, திரையரங்கத்தை கண்கானிக்க அமைக்கப்பட்ட குழுவின் தற்போதைய நடவடிக்கை என்ன, என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக டிசம்பர் 19 ஆம் தேதி பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.