ietamil EXCLUSIVE ரஜினிகாந்த்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி : அரசியல் அதிரடி சரவெடியாக புதிய படத்திற்கு திட்டம்

அரசியல் என்ட்ரி அரங்கேறும் நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோர்த்து ஒரு படம் செய்ய தயார் ஆகியிருக்கிறார் ரஜினிகாந்த்.

WEB EXCLUSIVE

ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கவிருக்கிறார். அரசியல் அதிரடி சரவெடி படம் அது!

ரஜினிகாந்த், தனது அரசியல் வருகையை உறுதி செய்துவிட்டார். ‘தனிக் கட்சி தொடங்குவேன். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன்’ என்பது வரை திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். தேர்தல் நெருங்குகிற வேளையில் கட்சியை அறிவித்து, அதே வேகத்தில் தேர்தலை எதிர்கொள்வதே அவரது வியூகம்! அதற்காகவே கட்சி பெயர் அறிவிப்பை தள்ளிப் போட்டு வருகிறார்.

ரஜினிகாந்துக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கபாலி’ படம்தான் பஞ்ச் டயலாக்களுடன் பட்டையைக் கிளப்பியது. பழைய ‘பாட்ஷா’ மாதிரி மீண்டும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லரை கொடுத்துவிட்டு அரசியலுக்குள் இறங்கினால் அது இமேஜை இன்னும் தூக்கி நிறுத்துவதாக அமையும் என நினைக்கிறார் ரஜினி. ஆனால் இப்போது ஆக்‌ஷன் த்ரில்லர்களை வெற்றிகரமாக கொடுக்கும் இயக்குனர்கள் அதிகம் இல்லை.

ரஜினிகாந்தின் இது தொடர்பான தேடல்களுக்கு ஒரே விடையாக அமைந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! ‘குஷி’ எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்து, அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் ‘தீனா’ மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்! 2002-ம் ஆண்டு விஜயகாந்துக்கு இவர் கொடுத்த ‘ரமணா’ இன்று வரை பேசப்படுகிற படம்!

ஊழலுக்கு எதிராக எத்தனை ஆக்‌ஷன் த்ரில்லர்கள் வந்தாலும், ரமணாவின் பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ட்ரெண்ட் செட்டராக அமைந்த படம் அது! அதன்பிறகும் சூர்யாவுக்கு கஜினி, விஜய்-க்கு துப்பாக்கி, கத்தி என வெற்றிகரமான ஆக்‌ஷன் பட இயக்குனராக பயணித்து வருகிறவர் ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமே!

இன்னொன்று, ஏ.ஆர்.முருகதாஸின் பஞ்ச் டயலாக்குகளும் பெயர் சொல்லக்கூடியவை! ரமணாவில், ‘தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை, மன்னிப்பு’ என்கிற டயலாக் இன்னமும் நின்றுகொண்டிருப்பது அதற்கு ஒரு உதாரணம்! இதே ரீதியிலான டயலாக்களை ரஜினி பேசுகையில் அதன் வீரியம் எப்படி இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ரகசியம்தான்!

இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் அரசியல் என்ட்ரி அரங்கேறும் நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோர்த்து ஒரு படம் செய்ய தயார் ஆகியிருக்கிறார் ரஜினிகாந்த். அண்மையில் இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு இடத்தில் ரஜினியும் ஏ.ஆர்.முருகதாஸும் சந்தித்து பேசிவிட்டார்கள்.

அப்போது, ‘பவர்ஃபுல்லான வசனங்களை தயார் பண்ணுங்க!’ என ரஜினியும் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். அதாவது, அரசியல் அநியாயங்கள் மற்றும் ஊழலைச் சாடுகிற படமாக அது இருக்க வேண்டும் என்பதை ரஜினி கோடிட்டு காட்டியதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸும், ‘10 ரமணா சேர்ந்தது போல பவர்ஃபுல்லான கதை-திரைக்கதை-வசனத்துடன் வருகிறேன்’ என கூறியிருக்கிறார்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இளைய தளபதியின் ‘விஜய் 62’ வேலையில் பிஸியாக இருக்கிறார். அதேபோல கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். இந்த இரு படங்களும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு! ‘விஜய் 62’ நவம்பரில் தீபாவளி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜின் படம் 2019 தொடக்கத்தில் ரிலீஸாகும் வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை 2019 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தால், ரஜினியின் தேர்தல் அரசியலை டேக் ஆஃப் செய்யும் பொறுப்பை ஏ.ஆர்.முருகதாஸின் படம் எடுத்துக் கொள்ளும்! ‘காலா’வை தயாரிக்கும் தனுஷே அதை தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகம்!

எனினும் தயாரிப்புப் பணிகள் குறித்து இன்னும் பேசப்படவில்லை. இப்போதைக்கு ரஜினிகாந்த்-ஏ.ஆர்.முருகதாஸ் காம்பினேஷனில் அரசியல் அதிரடி சரவெடிக்கு அஸ்திவாரம் போடப்பட்டிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close