காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இரு தமிழர்கள் உட்பட 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நாட்டின் முதல் குடிமகன் முதல் கடைசி குடிமகன் வரை என இந்த தேசமே, இன்னுயிர் நீத்த காவல் தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.
தீவிரவாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கும் நிலையில், சிஆர்பிஎஃப் வீரர்களின் ட்விட்டர் பக்கம், "நாங்கள் இந்த தாக்குதலை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். எங்கள் சகோதரர்களின் உயிர்த் தியாகத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - 44 வீரர்களை கொன்ற அதில் அகமது தார்.... தாக்குதலின் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!
காங்கிரஸ் உட்பட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், இந்த தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால், சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல், இந்தியா மீண்டும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வேரோடு சாய்க்க வேண்டும் என்பதே நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வேண்டுகோளாக உள்ளது.
இந்நிலையில், இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்து அறிக்கையில், "காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத தாக்குதலை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். போதும்... எல்லாம் போதும். இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை சுற்றி இந்த இதயம் இருக்கிறது. உயிரிழந்த தைரியமான அந்த நெஞ்சங்களின் ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.