தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகள் நடந்ததால் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அ.குமரெட்டியாபுரம் கிராம பொதுமக்கள் இன்று 48வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் கனகராஜ், த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் ஆகியோரும் அ.குமரெட்டியாபுரத்திற்கு வந்து பொதுமக்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ச.ம.க. தலைவர் சரத்குமார், மக்களோடு இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நாளை ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதிக்கு சென்று ஆலையை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களோடு அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
முதன்முறையாக தமிழக அரசை நேரடியாக விமர்சித்து ரஜினிகாந்த் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.