'யாசின் இனி என்னுடைய மகன்'! - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

சிறுவன் யாசினை சந்தித்த ரஜினிகாந்த்

ஈரோட்டில் ரூ. 50,000 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த 7 வயது சிறுவன் முகமது யாசின், குடும்பத்தினருடன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்தார்.

ஈரோடு கனிராவுத்தர்குளம், சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா – அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். சேமூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் முகமது யாசின், இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் சிலருடன் விளையாடிக் கொண்டிருந்த போது, பள்ளியை ஒட்டிச் செல்லும் சாலையில் கிடந்த 50,000 ரூபாய் பணப்பையை பார்த்திருக்கிறான். உடனடியாக அதனை வகுப்பாசிரியரிடம் கொண்டு போய் யாசின் கொடுக்க, அவனது நேர்மையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஆசிரியர்கள், யாசினை நேரடியாக ஈரோடு எஸ்.பி.யிடமே அழைத்துச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்தார்கள்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு: செங்கோட்டையனுக்கும் பாராட்டு To Read, Click Here

மேலும் படிக்க: ‘எனக்கு உதவி வேண்டாம்… ரஜினி அங்கிளை பார்த்தால் போதும்’ – யாசின்

இதனால், ஒரேநாளில் மக்கள் மத்தியில் ஹீரோவாக மாறிய சிறுவன் யாசினுடைய குடும்பத்திற்கு, பலரும்  உதவ முன்வந்தார்கள். ஆனால் அதிலும் பெருந்தன்மை காட்டி அந்த உதவிகளை ஏற்காமல் உதவி செய்வதாக கூறியவர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவிக்கிறார்கள் முகமது யாசினும், அவரது பெற்றோரும்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சாம்ராஜ், முகமது யாசின் பெற்றோர்களை சந்தித்து, என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அதற்கு முகமது யாசின், “எனக்கு உதவி வேண்டாம். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரை நான் சந்திக்க விரும்புகிறேன்” என்று கூற, நிச்சயம் ரஜினியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக சாம்ராஜ் உறுதியளித்தார்.

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில், யாசினின் குடும்பத்தை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது, யாசினுக்கு ரஜினி தங்கச் செயின் பரிசளித்தார்.

இதன்பிறகு பேட்டியளித்த ரஜினிகாந்த், “பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் இந்த காலக்கட்டத்தில், இவ்வளவு நேர்மையுடன் இந்த சிறுவன் நடந்து கொண்டது சாதாரண விஷயமல்ல.. இந்த பணம் நான் சம்பாதித்தது அல்ல என்று நினைத்து அவன் அதனை திருப்பிக் கொடுத்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நல்ல ஒழுக்கத்தை சொல்லி வளர்த்த பெற்றோருக்கு எனது வாழ்த்துகள். யாசினை என் மகன் போல் நினைத்து, அவன் வாழ்வில் என்ன படிக்க நினைத்தாலும் நான் படிக்க வைக்க தயாராக இருக்கிறேன். அவனது படிப்புச் செலவு முழுவதையும் நானே ஏற்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் ரஜினிகாந்த் கூறினார்.

வாழ்க்கையில் நேர்மையாக நடக்கும் பொழுது, அது நம்மை உச்சத்திற்கு கொண்டுச் செல்லும் என்பதற்கு நிகழ் காலத்தில் மிகச் சிறந்த உதாரணமாக யாசின் திகழ்கிறார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close