நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் டிசம்பர் 31-ல் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிமுகப்படுத்தினார்.
ரஜினிகாந்த் தொடங்குகிற அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் தமிழருவி மணியன் இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், அர்ஜுன மூர்த்தி பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுன் மூர்த்தியை ரஜினிகந்த் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்திருப்பதன் மூலம் அவர் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவை தெரிவிப்பேன் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சித் துவங்கப்படும் என்றும் டிசம்பர் 31-ல் தேதி அறிவிக்கப்படும் என்று ட்விட்டரில் அறிவித்தார்.
இது குறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்று ஹேஷ் டேக்குடன் குறிப்பிட்டிருந்தார். மேலும், வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி இருவரும் உடன் இருந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “2017 டிசம்பர் 31 ஆம் தேதியே நான் அரசியலுக்கு வருவதாக கூறியிருந்தேன். கொடுத்த வாக்கில் நான் பின்வாங்க மாட்டேன். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறினேன். மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். எழுச்சியை உண்டாக்கிய பின்னர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கொரோனா காலத்தில் அது முடியவில்லை.
கொரோனா வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும். ஆனால், மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் என்னால் மக்களை நேரில் சந்திக்க முடியவில்லை. மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அது உங்களுக்கு பெரிய ஆபத்து என்று மருத்துவர்கள் கூறினார்கள். நான் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூருக்கு சென்று உயிர் பிழைத்து வந்தது தமிழக மக்களிடன் பிரார்த்தனையால்தான். எனவே, இப்போது தமிழ் மக்களுக்காக என் உயிரே போனாலும்கூட என்னைவிட சந்தோசப்படும் நபர் யாராகவும் இருக்க முடியாது.
அரசியல் மாற்றம் காலத்தின் கட்டாயம். காலத்தின் தேவை. எல்லாவற்றையும் மாற்றம் வேண்டும். இதில் நான் ஒரு சின்ன கருவி. மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மாற்றம் நடக்க வேண்டும்.
வெற்றி அடைந்தாலும் அது மக்களுடைய வெற்றி; தோல்வி அடைந்தாலும் அது மக்களுடைய தோல்வி. இந்த மாற்றத்துக்கு மக்கள் அனைவரும் எனக்கு துணை நிற்க வேண்டும் என்று கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
40 சதவீதம் 'அண்ணாத்த' படப்பிடிப்பு மட்டும் நான் முடித்துக்கொடுக்க வேண்டியுள்ளது. என்னுடைய பாதையில் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு தலையெழுத்து உள்ளது. அதேபோல் நாட்டுக்கும் ஒரு தலையெழுத்து இருக்கிறது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்த கட்சி வேலை வந்து ராட்சச வேலை. அத்தனை வேலை இருக்கு. அது எல்லாத்தையும் செய்யனும். அந்த வேலை எல்லாம் தொடங்கிட்டோம். இன்னும் வேலை இருக்கு. அதை இன்னும் விரிவாக செய்ய வேண்டும். தமிழருவி மணியன் இவர் நான் அரசியலுகு வருவேன் என்று கூறியதிலிருந்து ஆதரித்து வருகிறார். இவரைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அர்ஜுனமூர்த்தி இவர் என்.எஃப்.சி டெக்னாலஜி எக்ஸ்பெர்ட். இவர் கிடைத்தது எனக்கு கிடைத்த பாக்கியம். நாம் என்ன வேலை செய்ய முடியுமோ அப்படி வேலை செய்து நாங்கள் நடக்கிற பாதையில் வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்று கூறினார்.
பின்னர், ரஜினிகாந்த் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை அறிமுகப்படுத்தி ஊடகங்களிடம் பேச வைத்தார். அதற்கு அடுத்து, அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிமுகப்படுத்தி அவரைப் ஊடகங்களின் முன்பு பேச வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன மூர்த்தி, “நாங்கள் மாற்று அரசியல் கொண்டுவருவதற்கு எல்லா ஆயத்தங்களுடன் தயாராகவே இருக்கிறோம். நீங்கள் அந்த மாற்றத்தையும் நல்ல உண்மையான அரசாங்க அமைப்பையும் வெகு விரைவில் நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். அதற்கு உண்டான உழைப்பு மற்றும் சிந்தனையுடன் நாங்கள் ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் முழுமையாக மக்களை நம்பி வந்ததனால், உங்களுடய ஆதரவை எங்கள் தலைவருக்கு கொடுக்க வேண்டும். அதை நீங்கள் மறக்காமல் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.” என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த், தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்ததோடு அவர் கிடைத்தது எனது பாக்கியம் என்று கூறியதால் பலருக்கும் யார் இந்த அர்ஜுன மூர்த்தி என்று தெரிந்துகொள்ளும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அர்ஜுன மூர்த்தி பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தவர். இவர் என்.எஃப்.சி டெக்னாலாஜி நடத்தி வருகிறார். பாஜக நடத்திய வேல் யாத்திரையிலும் கலந்துகொண்டவர். ரஜினியுடன் இணைந்ததைத் தொடர்ந்து, அர்ஜுனமூர்த்தி தனது ட்விட்டர் பக்க விவரத்தில் இப்போது தலைவருடன் என்று மாற்றியுள்ளார். மேலும், “தலைவருக்கு என் அனேக கோடி வணக்கங்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அர்ஜுன மூர்த்தி பதிவிட்டுள்ளார்.
தலைவருக்கு என் அனேக கோடி வணக்கங்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்???? pic.twitter.com/pHvKLZzmaU
— Arjunamurthy Ra (@RaArjunamurthy) December 3, 2020
அர்ஜுன மூர்த்தி ரஜினியுடன் இணைந்ததையடுத்து தமிழ்நாடு பாஜக தலைமை, அவரை தமிழக பாஜக அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் விடுவிப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து பாஜக தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜுனமூர்த்தியின் ராஜினாமாவை ஏற்று அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார். மேலும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று அறிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.