நடிகர் ரஜினிகாந்திற்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.
நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, 65 லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது நடிகர் ரஜினியை எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து, நடிகர் ரஜினிக்கு எதிராக அவர் தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் நான் ரஜினியிடம் பணம் கேட்காத நிலையில் எனக்கு எதிரான கருத்து அவதூறு கருத்து ஆகும் எனவே அவர் மீது அவதூறு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் விசாரணைக்காக வரும் ஜூன் 6 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும் அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க கோரி நடிகர் ரஜினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அவதூறு வழக்கு தொடர முடியாது எனவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிசந்திரன், இந்த வழக்கை மனுதாரர் வேண்டும் என்றே உள் நோக்கத்துடன் தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் உள்ள கருத்துகளின் படி புதிதாக தொடர முடியாது எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ரஜினிகாந்த் எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பதாகவும், மனு தொடர்பாக பதில் அளிக்க போத்ரா உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 5 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.