சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்து வருகிறது. படக்குழுவினருக்கு இப்படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
Advertisment
முன்னதாக படம் வெளியாவதற்கு முன் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் சென்றார். அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். ரஜினி அரசியல் தலைவர்களை சந்தித்து பேசியது பரபரப்பானது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த போது ரஜினி அவரது காலில் விழுந்து வணங்கினார். இது பெரும் சர்ச்சையானது. தமிழக அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இதற்கு விமர்சனம் செய்தனர். தொடர்ந்து அயோத்தி ராமர் கோயில், அனுமன் கோயில் உள்ளிட்ட ஆன்மீன இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியார்களிடம் பேசிய ரஜினிகாந்த், "4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை சென்று வந்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றார், தொடர்ந்து யோகி ஆதித்யநாத் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், வயது குறைவானவராக இருந்தாலும் யோகி, சன்னியாசி காலில் விழுந்து வணங்குவது எனது பழக்கம். நட்பு ரீதியாக மட்டுமே உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன்.
ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு எனது நன்றி. வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு நன்றி" என்று கூறினார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அரசியல் வேண்டாம் என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“