நடிகர் ரஜினிகாந்த், தனது தனிப்பட்ட பயணமாக 10-15 நாட்கள் அமெரிக்கா செல்ல இருக்கிறார். உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் முன்பு நேற்று இரவு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். மேலும் முன்னதாக அவர் கூறியிருந்த கருத்துகள் குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போராட்டத்தில், போலீஸ் மீதான தாக்குதலுக்கு தெரிவித்த கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குச் "சீருடையில் இருக்கும் போலீசார் மீது தாக்குதல் நடத்துவது மன்னிக்க முடியாத குற்றம், அதே போல் அதிகாரம் இருப்பதால் எல்லை மீறலாம் என்று போலீசாரும் நினைக்கக் கூடாது." என்று கூறினார்.
குறிப்பாகச் சமீபத்தில் ரஜினி மற்றும் குருமூர்த்தியின் சந்திப்பு குறித்துக் கேட்டபோது, “குருமூர்த்தி எனது 25 ஆண்டுகால நண்பன். அடிக்கடி நாங்கள் சந்திப்போம். இதில் தனித்துவம் ஒன்றும் கிடையாது.” என்று ரஜினி பதிலளித்தார்.
மேலும், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில், “ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அது உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்து கிடையாது.” என்றார்.
இறுதியில், பத்திரிக்கையாளர்கள் பற்றி இழிவான பதிவை பாஜக-வை சேர்ந்த எஸ்.வி. சேகர் பகிர்ந்ததைப் பற்றி கேட்டப்போது, “தெரிந்து செய்திருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் பெண் பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்தும் வகையில் எஸ்.வி.சேகர் கூறிய கருத்து மன்னிக்க முடியாத குற்றம்.” என்று திட்டவட்டமாக தனது கண்டனத்தை ரஜினி பதிவு செய்தார்.