சாத்தான்குளத்தில் தந்தை - மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினருடன் போன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் போலிசாரால் ஜூன் 19ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜூன் 22-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் கடுமையாக தாக்கியதாகவும் அதனாலேயே அவர்கள் இறந்ததாகவும் புகார் தெரிவித்து, இருவரின் மரணத்துக்கு நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, திமுக தலைவ மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் போலீசாரின் அராஜகத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மர்மமான முறையில் இறந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் ஜெயராஜ் மனைவியும் பென்னிக்ஸின் தாயுமான செல்வராணிக்கு போன் மூலம் ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
முன்னதாக, திமுக எம்.பி.கனிமொழி சாத்தான்குளத்திற்கு நேரில் சென்று ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆறுதல் கூறியதோடு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"