நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து தான் பேசியது தவறான தகவல் இல்லை என்றும் அன்று நடந்தவைகளைத்தான் பேசினேன் என்று அவுட்லுக் ஆங்கில பத்திகையை ஆதாரம் காட்டி, இதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திராவிட இயக்க தலைவர்கள் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் எதிர்வினையாற்றியுள்ளனர்.
பத்திரிகையாளர் சோ.ராமசாமி தொடங்கிய துக்ளக் பத்திரிகையின் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமர் சீதை சிலைகள் நிர்வானமாக வைக்கப்பட்டு செருப்புமாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது. அதனை சோ துக்ளக் பத்திரிகையில் அச்சிட்டு வெளியிட்டார். அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதியின் திமுக அரசு அந்த பத்திரிகைகள் வாசகர்களுக்கு கிடைக்காமல் தடை செய்தது. பின்னர், மீண்டும் அந்த பத்திரிகை அச்சிடப்பட்டு பிளாக்கில் விற்பனையானது என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் பெரியார் குறித்த இந்த பேச்சு சர்ச்சையானது. இது குறித்து திராவிட இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் மறுப்பு தெரிவித்தனர். ஊர்வலத்தில், ராமர், சீதை சிலைகள் நிர்வானமாக கொண்டு செல்லப்படவில்லை என்றும் செருப்பு வீசியது எதிர்ப்பு தெரிவித்த இந்து மகாசபையைச் சேர்ந்தவர்கள் என்று கலி.பூங்குன்றன், கொளத்தூர் மணி உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், ரஜினி பெரியார் குறித்து தவறாக பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினியின் வீடு முற்றுகையிடப்படும் என்றும் அறிவித்தனர்.
மன்னிப்புலாம் கேட்க முடியாது : ரஜினி ஆவேசம் #Rajinikanth pic.twitter.com/ngVGyob7jN
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 21, 2020
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, 1971-இல் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமர் சீதை சிலை நிர்வானமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டதாக நான் கூறியது சர்ச்சையாகி உள்ளது. நான் தறாக கூறவில்லை. அந்த சம்பவம் பற்றி இந்து குரூப் அவுட்லுக் பத்திகையில் செய்தி வெளியாகி உள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். ரஜினியின் இந்த பதிலுக்கு திராவிட இயகத்தலைவர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர். ரஜினியின் பேச்சு சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்ட, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அன்றைக்கு வந்த அவுட் லுக் ஆங்கில பத்திரிகையை ஆதராம் காட்டி அதை வைத்துதான் பேசினேன் என்று கூறியுள்ளார். அந்த பத்திரிகையில் வந்த படங்களில் ஒரு படம்கூட ராமர், சீதை நிர்வானமாக இருந்த படம் இல்லை. அதில் இருக்கிற படங்கள் எல்லாம் பெரியார் அன்றைக்கு, புராணங்களில் இருக்கக் கூடிய கதைகளை ஓவியமாக வரைந்து ஊர்வலத்திலே கொண்டுவந்தாரே தவிர ராமரையோ, சீதையோ அவர் நிர்வானமாக கொண்டுவரவில்லை. செருப்பு மாலையும் அணிவிக்கவில்லை.
அன்றைக்கு நடந்த சம்பவத்தில், அன்று இருந்த இந்து மகாசபையைச் சேர்ந்த 50 பேர், சேலத்தில் ஆயிரக்கணக்கான கருஞ்சட்டையினர் நடத்திய ஊர்வலத்தில் பெரியாரை எதிர்த்து முழக்கமிட்டு ஒரு செருப்பை வீசினர். அந்த செருப்பு பெரியார் வந்த வாகனத்தை நோக்கி வீசப்பட்ட செருப்பு. அது பெரியார் மீது விழவில்லை.
ஆனால், வடநாட்டிலே ராம் லீலா என்ற பெயரில் ராவணனனையும் கும்பகர்ணனையும் சூர்ப்பனகையையும் கொளுத்துவார்கள். இந்து திராவிடர்களை தமிழர்களை இழிவு படுத்தும் செயல் சென்று அதனை நிறுத்த வேண்டும் என்று பெரியார் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை வைப்பார். ஆனால், அதனைக் கேட்காமல் வடநாட்டிலே தொடர்ந்து ராவணன் உருவத்தை கொளுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு ஒரு எதிர்வினையாகத்தான் பெரியார் ராமருடைய உருவத்தை அட்டையிலே வைத்து வண்டியிலே கொண்டுவருகிறார். அது ராமர் நிர்வானமாக இருக்கும் படம் அல்ல; பொதுவாக பயன்படுத்தக் கூடிய ராமர் படம்.
அந்த வண்டியின் மீதுதான் கருப்புக்கொடி காட்டிய இந்து மகாசபையைச் சேர்ந்தவர்கள் வீசிய செருப்பு அந்த படத்தின் மீது விழுந்து அங்கே கீழே விழுகிறது. பெரியார் மீது செருப்பு வீசுவதாக நினைத்து ராமர் படம் மீது செருப்பு வீசியது அவர்கள்தான். இதுதான் அங்கே நடந்த சம்பவம். 95 வயது வரை வாழ்ந்த பெரியார் இறுதிவரை ராமரை எதிர்த்து வாழ்ந்தார். ராமரின் நிர்வான படம் வைத்து செருப்பு மாலை போட்டு ஊர்வலம் செல்லவில்லை.” என்று கூறினார்.
பெரியார் குறித்து ரஜினி சர்ச்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவருடைய வீடு முற்றுகையிடப்படும் என்று கூறிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, 1971 ஆம் ஆண்டு நிகழ்வு குறித்து ரஜினி காட்டிய ஆதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ஊடகங்களில் பேசிய கொளத்தூர் மணி, “1971-இல் நடந்த சம்பவம் குறித்து ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக் பத்திரிகையை காட்டியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினி கருத்து குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், “பெரியார் குறித்த ரஜினியின் கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்திவந்த நிலையில் அவர் வருத்தம் தெரிவிக்க மாட்டேன். தனது கருத்து சரியானது என்று கூறியுள்ளார். அவர் வருத்தம் தெரிவிப்பதும் தெரிவிக்காததும் அவருடைய தனிப்பட்ட விருப்பம். நான் கட்டாயப்படுத்தவில்லை. சேலத்தில் நடந்த பேரணியில் திராவிடர் கழகத்தினர் மீது செருப்பு வீசியிருக்கிறார்கள். அந்த செருப்பை எடுத்து ராமர் சீதை படத்தின் மீது அடித்ததாக தெரிகிறது. இதுதான் பதிவாகி இருக்கிற வரலாற்று உண்மை. ஆனால், ரஜினி சங்பரிவார் அமைப்பினர் சார்ந்தவர்கள் தருகின்ற தரவுகளை வைத்துக்கொண்டு, அன்றைக்கு துக்ளக் பத்திரிகையில் வெளியான செய்திகளை வைத்துக்கொண்டு பெரியாரே அப்படி என்று சொல்லுவதும் அதுதான் உண்மை என்று வாதிடுவதும் ஏற்புடையது அல்ல. ரஜினி மீண்டும் ஒருமுறை வரலாற்றுக் குறிப்புகளை புரட்டிப் பார்க்க வேண்டும். அவர் பெரியார்தான் செய்தார் என்று வாதிடுவது வருத்தமளிக்கிறது. நடிகர் ரஜினி வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்வதற்கு அதிகாரப்பூர்வமான தகவல்களைத் திரட்டி ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். ராமர் சீதை படத்தை பெரியார் செருப்பால் அடித்தார் என்று ரஜினி கூறுவது முற்றிலும் தவறான கருத்து. மிகப் பெரும் வரலாற்றுப்பிழை.” என்று கூறினார்.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் ஊடகங்களில் கூறுகையில், “தி.க. பேரணியில் நடந்ததை படங்களுடன் வெளியிட்ட துக்ளக் இதழ், 1971-இல் கடைகளில் விற்பனையாகவில்லை. கடைகளில் விற்க முடியாதபடி துக்ளக்கை அப்போதைய அரசு பறிமுதல் செய்துவிட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அதில், சோவும் நானும் சாட்சியம் அளித்தோம். ஆனால், நீதிபதி, அமைதியாக நடந்த ஊர்வலத்தில், அப்படியான நிகழ்வு நடக்கவில்லை என்று கூறியது. அப்படி நடந்திருந்தால், பொதுமக்களே எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள் என்று கூறியது.” என்று கூறினார்.
பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் கூறுகையில், “ரஜினி சொன்னதை நான் ஏற்கிறேன். ஏனேனில் அந்த சம்பவம் நடந்தது. அதற்கு பாஜகவின் கே.என்.லட்சுமணன் சாட்சி” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் பாரதி தம்பி, ரஜினியின் சர்ச்சை பேச்சு குறித்து தனது முகநூல் பக்கத்தில், ரஜினிகாந்த் மேற்கோள் காட்டும் Outlook பத்திரிகை, தி இந்து நாளிதழ் குழுமத்தில் இருந்துவருவது அல்ல. ரஹேஜா பிரதர்ஸ் நடத்தும் பத்திரிகை அது. ஏற்கனவே சொன்ன தகவல் தவறு என்று எழுந்த சர்ச்சையை விளக்குவதற்காக ஒரு, ஒரு நிமிட பிரஸ்மீட் நடத்துகிறார். அதிலும் முதல் வரியிலேயே தவறு. இதுல மன்னிப்பு வேற கேட்க மாட்டாராம்...” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரியார் குறித்த ரஜினியின் சர்ச்சை பேச்சு குறித்து நெட்டிசன்கள் பலரும் விவாதித்து வருகின்றனர்.
#அன்றும்_இன்றும்_என்றும்_ரஜினி
Fear of #Rajinikanth .#Rajini didn’t say anything bad.
He just told the truth.
These Dravida porralis trying to twist facts & digging a big hole for themselves.
Will they change? Never. https://t.co/hFt4bcSnm5— dev shak (@devashak) January 19, 2020
எவனோ ரஜினி-யை தவறாக வழி நடத்துறானுக!
Out look இப்போ வந்த பத்திரிகை!
சோ -வும் The Hindu வும் மன்னிப்பு கேட்டு தான் சேலத்துல அந்த வழக்கை முடிச்சு வச்சாங்க!@rajinikanth இது வடக்கு அல்ல தமிழ்நாடு!
இங்கே……, நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் தான் பொறுப்பு! pic.twitter.com/QoHPbc5DbP— தோழன் (@pkcomrade) January 21, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.