ரஜினிகாந்துக்கு எதிரான ஃபைனான்சியர் தொடர்ந்த அவதூறு வழக்கை மீண்டும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஜினிகாந்துக்கு எதிராக சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சினிமா பைனான்சியர் முகன்சந்த்போத்ரா, ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் பின்னணி வருமாறு: திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்கை உயர்நீதிமன்றத்தில் போத்ரா தொடர்ந்தார். ரஜினியின் பெயரை உச்சரித்து தன்னிடம் கஸ்தூரி ராஜா பணம் பெற்றதாக அந்த வழக்கில் போத்ரா கூறியிருந்தார்.
ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நான் யாருக்கும் கடன் உத்தரவாதம் அளிக்கவில்லை. என்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் போத்ரா வழக்கு தெடர்ந்துள்ளார்’ என பதில் மனுவில் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டினால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு போத்ரா தொடர்ந்து ஆஜராகவில்லை என்று கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முகுன்சந்த் போத்ரா மேல் முறையீடு செய்தார்.
அதில், ‘தன்னுடைய தரப்பு வாக்குமூலங்களை கூட பதிவு செய்யாமல் விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி. முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், என் மீதான அவதூறு வழக்கின் சீராய்வு மனுவை போத்ராவின் மகன் தொடர எந்த அதிகாரமும் இல்லை. விசாரணை நீதிமன்றத்தில் போத்ரா நேரில் ஆஜராகாத காரணத்தால் தான் அவரின் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறிய கருத்தை முழுமையாக போத்ரா விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை.எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. அபராத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என பதில் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகும் உத்தரவிட்ட நீதிபதி முரளிதரன், ரஜினிக்கு எதிரான அவதூறு வழக்கை மீண்டும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் படி விசாரிக்க வேண்டும். இந்த
வழக்கு விசாரணைக்கு ரஜினிகாந்த் நேரில் ஆஜராக விலக்கு அளிப்பதாக உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.