Politicians speaks about Rajini's decision Tamil News : வருகிற 31-ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தன் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவைப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், சிலர் தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டும் வருகின்றனர்.
இது தொடர்பாகப் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், "கட்சி தொடங்கும் அறிவிப்பை திரும்பப்பெற்ற நடிகர் ரஜினிகாந்த், வறட்டு கவுரவம் பார்க்காமல் ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. "அவருடைய உடல்நலம் மிக முக்கியமானது. ஏற்கெனவே நான் சொன்னதுபோல், அவர் உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதே முக்கியம். சில மாதங்களுக்கு முன்பு அவரை சந்தித்தபோது, கட்சி தொடங்குவதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லையென்றும், அரசியல் பணியாற்றுவதில் தனக்கு ஆர்வம் இருக்கிறது என்றும் கூறினார். ஆனால், அதற்கு உடல்நலம் ஒத்துழைக்குமா என தெரியவில்லை என்பதையும் தயக்கத்தோடு கூறினார். அந்தவகையில், இன்று உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். தன்னுடைய ரசிகர்களையும், உடன் பயணிப்பவர்களையும் ஏமாற்ற விரும்பவில்லை என்று துணிச்சலாகக் கூறி முடிவெடுத்திருப்பது வரவேற்கக்கூடியது. அதேசமயம், ரஜினிகாந்தின் இந்த முடிவு பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளுக்கு மட்டும்தான் பெரிய ஏமாற்றத்தைத் தரும். மற்றபடி இதனால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
"அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற ரஜினிகாந்த்தின் அறிவிப்பு அரசியலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை" என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
"ரஜினி எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்குத்தான் இருக்கும்" என்று அமைச்சர் ஜெயகுமாரும், ரஜினி அதிமுகவிற்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் தெரிவித்துள்ளனர்.
"ரஜினி தனது உடல்நலனைக் கருத்தில் கொண்டு எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்கிறேன்" என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்.
அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்!
— சீமான் (@SeemanOfficial) December 29, 2020
ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, அவரது முடிவுக்குப் பல வகையில் கருத்துக்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ரஜினி 1996-ல் இருந்தது போல் வாய்ஸ் அரசியலில் ஈடுபடுவார் என ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் திரைப்பட இயக்குனருமான கார்த்திக் சுப்புராஜ், "உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா . உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். நாங்கள் எப்போதும் உங்களை நேசிப்போம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Thalaiva... Pls Don't feel bad... May be we didn't deserve a good political leader like you..... You are important to us Thalaiva... Take care & we will Love you as always Thalaiva ????❤️???? https://t.co/OJtBJQECiV
— karthik subbaraj (@karthiksubbaraj) December 29, 2020
ரஜினி அரசியல் கட்சி தொடங்கவில்லை என அதிரடி முடிவு வெளியானதைத் தொடர்ந்து, "ரஜினியின் இத்தகைய அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ரஜினி அரசியலுக்கு வருவார். ஏதாவது நல்லது செய்வார் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பை தொண்டர்கள் மறப்பது கடினம். ரஜினி கட்சி தொடங்கப்போவது குறித்தெல்லாம் என்னிடம் பேசினார். தற்போது மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று இப்படி முடிவெடுத்துள்ளார். கட்சி தொடங்கவில்லை என்ற செய்தி எனக்கே இப்போது தான் தெரியும். பரவாயில்லை. அவரது முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என அவரது சகோதரர் சத்ய நாராயணா கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.