நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளர்களிடம் பேசுகையில், “ ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை. அது என்னவென்று இப்போது சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன்” என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை நேரில் சந்தித்து ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு தான் அரசியலுக்கு உறுதி என்று அறிவித்த பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்த பிறகு அவருடைய ஒவ்வொரு பேட்டியும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கவனம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, ரஜினியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான தமிழருவி மணியன் ஒரு பேட்டியில் ரஜினி ஏப்ரல் மாதம் கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார். இதனால், ரஜினி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கட்சி அறிவிப்பார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
#JUSTIN மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை https://t.co/ETRB52ll4r
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 5, 2020
இந்த நிலையில், ரஜினி சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால், ராகவேந்திரா திருமண மண்டபம் ரசிகர்கள் கூட்டத்தால் கொண்டாட்டமாக காணப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, வெளியே வந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினி கட்சி தொடங்குவது பற்றி விவாதித்ததாகவும் கூட்டத்தில் விவாதித்த எதையுமே அவர்தான் முறையாக அறிவிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்தபிறகு, நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை. அது என்னவென்று இப்போது சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன் என்று கூறினார்.
கேள்வி: சில மாதங்களுக்கு முன்பு கட்சி தொடங்கும் பணி 90 சதவீதம் முடிந்திருக்கிறது. பாக்கியுள்ள பணிகள் முடிந்த உடனே அறிவிக்கப்படும் என்று சொல்லியிருந்தீர்கள். இப்போது அந்த பணிகள் எந்த அளவில் இருக்கிறது. எப்போது நீங்கள் கட்சி தொடங்குவீர்கள்? அதற்கான அறிவிப்புகள் எப்போது வரும்?
ரஜினி: அதைப் பற்றி எல்லாம் பேசுவதற்குதான் ஒரு ஆண்டுக்குப் பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன். அவர்களிடம் நிறைய கேள்வி இருந்தது. அதற்கு எல்லாம் நான் பதில் கொடுத்தேன். நிறைய விஷயங்களை நாங்கள் பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கு எல்லாம் ரொம்ப திருப்தி. ஆனால், ஒரு விஷயத்தில் எனக்கு அவ்வளவு திருப்தி கிடையாது. எனக்கு ஏமாற்றாம்தான். அது என்னவென்று இப்போது சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன்.
#LIVE: ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு #Rajinikanth https://t.co/tFg6f054bM
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 5, 2020
கேள்வி: முஸ்லிம் அமைப்புகளை சந்தித்து பேசினிர்கள் அவர்கள் என்ன சொனார்கள்? என்ன நடந்தது?
ரஜினி: அது ரொம்ப இனிமையான சந்திப்பு. அவர்கள் முதலில் முக்கியமாக வலியுறுத்துவது சகோதரத்துவம், அன்பு, அமைதி நாட்டில் நிலவ வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவும் தயாராகவும் இருக்கிறோம். நீங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் நிச்சயமாக உறுதுணையாக இருப்பேன். நீங்கள் வந்து சிஏஏ எ.பி.ஆர்- ஆகியவற்றில் என்னவெல்லாம் மாற்றம் இருக்கிறது என்று நீங்கள் குருமார்கள், அரசியல்வாதிகள் இல்லை, குருமார்கள் எல்லாம் ஆலோசனை செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியிடம் சந்திப்பதற்கு நேரம் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் அவர்கள் கேட்பார்கள். அது முறையாக இருக்கும். அதற்கு என்னால் முடிந்த அளவுக்கு நான் உதவி செய்வேன் என்று கூறினேன்.
கேள்வி: தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறினீர்கள். வெற்றிடத்தை ரஜினியும் கமலும் சேர்ந்து பூர்த்தி செய்ய வாய்ப்பு உள்ளதா?
ரஜினி: அதற்கு நேரம்தான் பதில் சொல்லும்.
கேள்வி: நீங்கள் அரசியலுக்கு வருவேன் என்று கூறி 2 ஆண்டு நிறைவடைந்துள்ளது. உங்களுடைய அரசியல் கட்சி கட்டமைப்பு எந்தளவுக்கு இருக்கிறது? கூட்டத்தில் என்ன பேசினீர்கள்?
ரஜினி: நாங்கள் உள்ளே பேசியதை எல்லாம் வெளியே சொல்ல முடியாது.
கேள்வி: ஏமாற்றம் என்று கூறினீர்கள்; அரசியல் சூழலில் ஏமாற்றமா? அது என்ன ஏமாற்றம்?
ரஜினி: எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம். அதை நேரம் வரும்போது சொல்கிறேன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.