நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று அங்கே சிகிச்சை முடிந்த பிறகு சென்னை திரும்பியதையடுத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை ஜூலை 12ம் தேதி சந்திப்பதாக அறிவித்தார். ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடும் முடிவை கைவிடுவதாக அறிவித்ததற்கு பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் என்பதால் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ரஜினிகாந்த் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்க வேண்டியது என்னோட கடமை.
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.
கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகம் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.