கமல்ஹாசனை கண்டு கொள்ளாத திமுக... ரஜினிகாந்தை ‘காய்ச்சி’ எடுப்பது ஏன்?

ரஜினிகாந்த் மீது திமுக நாளேடான முரசொலி நடத்தி வரும் அதிரடி பாய்ச்சல் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ஏன் இப்போது இந்த அட்டாக்?

ரஜினிகாந்த் மீது திமுக நாளேடான முரசொலி நடத்தி வரும் அதிரடி பாய்ச்சல் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ஏன் இப்போது இந்த அட்டாக்?

ரஜினிகாந்த் அரசியலில் களம் இறங்குவதை உறுதி செய்துவிட்டார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த இருப்பதாகவும் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த் அண்மையில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில், ‘தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நான் நிரப்புவேன்’ என்றார். இதை மையமாக வைத்து கடந்த 9-ம் தேதி திமுக நாளேடான முரசொலி, ‘தமிழ்நாட்டில் வெற்றிடமாம், தெரியுமா உங்களுக்கு? அதை நிரப்ப ரஜினி வருகிறாராம், இது எப்படி இருக்கு?’ என முழுப் பக்க கட்டுரை வெளியிட்டது.

ரஜினிகாந்த் மிக தாமதமாகபெரியார் சிலை விவகாரத்தில் ரீயாக்ட் செய்திருப்பதையும், ‘அவர் எப்போதும் டைரக்டர் சொல்படி நடிப்பவர்! டெல்லி டைரக்டர்களிடம் இருந்து உத்தரவு வர லேட்டாகியிருக்கும்’ என கடுமையாக முரசொலி விமர்சனம் செய்திருக்கிறது.

‘எம்.ஜி.ஆர். நல்லவரு… கருணாநிதி நல்லவரு… ஜெயலலிதா நல்லவரு! ஏனுங்க ரிப்பேர்காரரே, அப்போ இந்த சிஸ்டத்தை சரியில்லாம ஆக்கியவர் யாருங்கோ!’ என அன்றே இன்னொரு பக்கத்தில் நையாண்டி கருத்தை பதிவு செய்திருக்கிறது முரசொலி. ரஜினிகாந்தின் இமயமலை பயணத்தையும் முரசொலி கிண்டல் செய்திருக்கிறது.

ரஜினிகாந்தை ‘வச்சு செய்யும்’ முரசொலி! ‘டெல்லி டைரக்டர்களின் உத்தரவுப்படி நடிப்பவர்’ என விமர்சனம் – படிக்க, இங்கே ‘க்ளிக்’ செய்யவும்.

ரஜினிகாந்த் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. திமுக.வை அவர் எங்கும் ‘அட்டாக்’ செய்யவும் இல்லை. அதற்குள் ரஜினிகாந்த் மீது திமுக தாக்குதலை ஆரம்பித்திருப்பதுதான் விசேஷம். அதேசமயம், கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவித்து இரு மாநாடுகளை நடத்திவிட்டார். அவர் மீது எங்கும் திமுக அட்டாக் செய்யவில்லை.

‘ஆன்மீக அரசியல் என கூறும் ரஜினியை திராவிட இயக்கத்தின் கொள்கை எதிரியாக பார்க்கிறோம். கமல்ஹாசன் தன்னை கடவுள் மறுப்பாளர் என்றும் தனது அரசியலில் திராவிடம் இருக்கும் என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். எனவே இப்போது அவரை விமர்சிக்க வேண்டிய தேவை எழவில்லை’ என்கிறார், திமுக தலைமைக்கழக நிர்வாகி ஒருவர்.

திமுக உள் நிலவரங்களை அறிந்த இன்னொரு நிர்வாகி சற்றே விரிவாக பேசினார்… ‘அதிமுக வீழ்ச்சியை சந்திக்கும் பட்சத்தில், அரசியல் களத்தில் அந்த இடத்தை பிடிக்க இருப்பவர் ரஜினிதான்! கமல்ஹாசனை ஒப்பிடுகையில், ரஜினிக்கு தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் வரை வீரியமான தொண்டர்கள் உண்டு. பாஜக இதை முன்கூட்டியே புரிந்து கொண்டுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு இபிஎஸ்-ஓபிஎஸ் மீது நம்பிக்கை இழந்து ரஜினியை உள்ளே நுழைக்கிறது.

சென்னை வேலப்பன்சாவடியில் அண்மையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவுக்கு கூடிய கூட்டமும் ரஜினியின் பலத்தை நிரூபித்தது. ரஜினிகாந்துக்கு எதிரான இன்னொரு சக்தியாக தமிழ்நாட்டில் டிடிவி தினகரன் எழ முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பம் முதல் ரஜினியை டிடிவி விமர்சிக்கும் பின்னணி இதுதான்!

இந்தத் தருணத்தில் திமுக பழைய நட்பை மனதில் வைத்து ரஜினியை விமர்சிக்காமல் விட்டால், சிறுபான்மை வாக்கு வங்கியும் ரஜினி எதிர்ப்பாளர்களின் வாக்குகளும் டிடிவி தினகரன் பின்னால் போய்விடும். எனவே தேர்தல் களத்தில் முக்கிய இடத்தில் நிற்க வேண்டுமானால் ரஜினியை விமர்சித்தே ஆகவேண்டும்.

கமல்ஹாசனைப் பொறுத்தவரை, அவரது சமீப கூட்டங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. அவர் தனியாகவோ அல்லது அவரது தலைமையில் அணி அமைத்தோ பலம் காட்டும் வாய்ப்பு இல்லை. கமல்ஹாசன் அரசியலில் நீடிக்க வேண்டும் என்றால், திமுக அணிக்கு அவர் வந்தாக வேண்டும். இதைப் புரிந்துகொண்டுதான் கமல்ஹாசனும் ஆளும் அதிமுக.வை மட்டும் விமர்சிக்கிறார்.’ என்கிறார் அந்த நிர்வாகி!

தமிழ்நாடு தேர்தல் களம் ரஜினிக்கும், திமுக.வுக்கும் இடையிலான பலப்பரீட்சையாக அமையும் என்கிற கணிப்பு திமுக முகாமில் தெரிகிறது.

 

×Close
×Close