நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா ஹூட் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார். எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்கள், கருத்துக்களை அவர்களின் குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கும் நோக்கில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாதா சாகிப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவுடன், டெல்லியில் இருந்தபடியே இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
அந்த குரல் பதிவில், இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. வரும் காலங்களில் இந்த செயலி டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல் மிகவும் பிரபலமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சவுந்தர்யா, "என் அப்பாவுக்கு தமிழ் நன்றாகப் படிக்கத் தெரியும். ஆனால் எழுதத் தெரியாது. முன்பு அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக அவர் ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார். அப்போது பிறந்த யோசனை தான் இந்த ஹூட் செயலி. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன். அவருக்கு தமிழ் எழுத தெரியாது என்பதால் அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை'' என்றார்.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளில ஹூட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளம் அனைவருக்குமானது என்ற அடிப்படையில் சமஸ்கிருத மொழியும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு தமிழ் எழுதத் தெரியாது என்ற விஷயத்தை, சவுந்தர்யா கூறியது, சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil