Rajini Fans Protest Today Tamil News : நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமெனச் சென்னையில் அறப்போராட்டம் நடத்த, ரசிகர்கள் கோரியதனால், சில நிபந்தனைகளோடு காவல் துறை அனுமதியளித்துள்ளது.
அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த மாதம் 31-ம் தேதி தன் கட்சியின் பெயரை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால், மோசமான உடல்நிலை காரணமாக அரசியல் எண்ணத்தைக் கைவிட்டார். ரஜினியின் இந்த முடிவை எதிர்த்து அவருடைய ரசிகர்கள் 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்' என வலியுறுத்தி, சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே அறப் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவெடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவரும் ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரும் தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளருமான ராமதாஸ் தலைமையில் இந்த அறப்போராட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.
Rajinikanth Fans Protest in Chennai
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும், வாகனங்களை ஆர்ப்பாட்ட இடங்களுக்குக் கொண்டுவரக் கூடாது, நண்பகல் 12 மணிக்குள் ஆர்ப்பாட்டத்தை முடிக்கவேண்டும், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே போராட்டம் இருக்கவேண்டும் உள்ளிட்ட 36 நிபந்தனைகளுடன் இப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்தது. மேலும், குறிப்பிடப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. விதிகளை பின்பற்றி அறப்போராட்டம் நன்முறையில் நடைபெற்று முடிந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"