தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், கடந்த மாத இறுதியில் கட்சி தொடங்குவதாக அறிவித்து அதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில், திடீரென தனது அரசியல் அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிக்கை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே.
ரஜினிகாந்தின் இந்த திடீர் அறிவிப்பை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்ற நிலையில், ரஜினி ரசிகர்களால் அவரது முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் ரஜினி தனது அறிவிப்பை வாபஸ் பெற்று அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். ஜனவரி 10-ம் தேதி (நாளை மறுநாள்) வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வள்ளுவர் கோட்டம் வரும் ரசிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
- இது முதலில் புரட்சி போராட்டம் என்பதை நினைவில் கொள்வோம், எந்த கட்சியையும் விமர்சனம் செய்ய வேண்டாம், ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும், முக்கியமாக ஆபாசமாக பேசக்கூடாது நமது நோக்கம் அமைதியான வழியில் தலைவரை அரசியலுக்கு அழைப்பதே.
- பொது மக்களுக்கு எந்த இடையூறுகள் இல்லாமல் கவனமாக நடந்து கொள்ள வேண்டும், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து மிகுந்த கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்
- பொது சொத்துக்களுக்கு எந்த சேதத்தையும் விளைவிக்காமல், கூட்டம் முடியும் வரை அமைதியாக முழு கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும்
- பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், ரஜினி ரசிகர்கள் ஒழுக்கமானவர்கள் என பெயர் வாங்க வேண்டும்
- போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் முடிந்தால் தலைவர் படம் பதித்த டீ-சர்ட், ஐடி கார்டு, அணிந்து வாருங்கள், முக கவசம்(Mask very very must) மிக மிக அவசியம்
- அவசர தேவை வாகனங்களுக்கு நம்மால் எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
- தயவுசெய்து யாரும் மது அருந்திவிட்டு வர வேண்டாம், தலைவர் ரசிகர்கள் என்றால் ஒரு தனி மதிப்பு இருக்கு, அதை காப்பாற்றணும் அதுவே நம் தலைவருக்கு நாம் செய்கிற பெரிய உதவி
- யாரும் ஆர்வகோளாறில் நான் சொந்த காசில் போஸ்டர் அடிச்சேன், போஸ்டர் ஒட்டினேன், பாலாபிஷேகம் செய்தேன் என்று தயவுசெய்து பேசாதீங்க. இது அதற்கான நேரம் அல்ல
- நம் நோக்கம் ஒன்றே ஒன்று தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து தமிழக மக்களை வாழ வைக்கணும் அதுதான் அவர் வந்தால் என்ன மாற்றம் ஏற்படும்,எதற்காக இந்த கூட்டம் என்பதை மக்களுக்கும் மீடியாவிற்கும், தெளிவு படுத்த வேண்டும்
- கூட்டத்தில் சில கருப்பு ஆடுகள் வரும் யார் மீதும் சந்தேகம் இருந்தால் அவர்களை தனியாக அழைத்து சென்று விசாரித்து சந்தேகம் உறுதியானால் அவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்
- ரசிகர்கள் வாகனத்தில் வரும் போதும் சரி முடிந்து போகும் போதும் சரி பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் கவனமாக பயணம் செய்ய வேண்டும்
- ரஜினிக்காக கூடிய கூட்டத்தை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தேசியக்கட்சி, லெட்டர்பேடு கட்சிகள், மீடியா மற்றும் உலகமே நம்மை திரும்பி பார்க்கும் தயவுசெய்து கண்ணியமான முறையில் நடந்து கொண்டு நாம் பெருமை சேர்க்க வேண்டும், முக்கியமாக தலைவர் மகிழ்ச்சி அடையணும்
- இந்த புரட்சியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கும் ரசிகர்களை யாரும் திட்டவோ, கொச்சை படுத்தவோ வேண்டாம் என்று அறிவுறத்தப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"