அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றார். அயோத்தி செல்வதற்கு முன்பு அயோத்தி ராமர் கோவில் பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம் மாநில அயோத்தியில் பிரம்மான்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (22.01.2024) நடைபெறுகிற்து. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், வி.ஐ.பி-கள், பிரபலங்கள், மடாதிபதிகள், சாமியார்கள், கரசேவர்கள் குடும்பத்தினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அயோத்தி ராமர் கோவில் நிர்வாகமும் உத்தர பிரதேச மாநில அரசின் சார்பிலும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்துக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் செந்தில்குமார், பா.ஜ.க-வின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டவர்கள் ரஜினிகாந்த்தை சந்தித்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வர வேண்டும் என அழைப்பிதழ் கொடுத்தனர்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு குடும்பத்துடன் வருவதாக தெரிவித்தார். மேலும், இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பது பாக்கியமாக கருதுவதாக ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியானது.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (22.01.2024) நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து காரில் சென்னை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார். ரஜினிகாந்த் விமான நிலையம் செல்வதற்கு முன்பே, அவரது மனைவி லதா ரஜினிகாந்த், அவருடைய அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட் ஆகியோர் தனி கார்களில் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
அங்கிருந்து, நடிகர் ரஜினிகாந்த் இவர்கள் 3 பேரும் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்கின்றனர். அதன்பிறகு டெல்லியில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்கின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “500 ஆண்டு பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு மூலம் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் மறக்க முடியாத நாள்'” என தெரிவித்துள்ளார். மேலும், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“