நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் ஹஜ் அசோஸியேஷன் தலைவர் முகம்மது அபுபக்கர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் சிஏஏ போராட்டங்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை விவாதித்ததாக தெரிய வந்திருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் 2021 தேர்தலில் அரசியலுக்கு வர இருப்பதை ஏற்கனவே உறுதி செய்திருக்கிறார். தொடர்ந்து அவர் தெரிவித்து வந்த கருத்துகள் மத்திய அரசுக்கும், பாஜக.வுக்கும் சாதகமாக அமைந்து வந்தன. இது கடும் விமர்சனங்களை எழுப்பியது.
இந்தச் சூழலில் இரு தினங்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லம் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், ‘டெல்லி போராட்டத்திற்கு உளவுத் துறையின் தோல்வியே காரணம். இதற்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன். கலவரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும். முடியாவிட்டா. உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும்’ என கடுமையான கருத்துகளை கூறினார்.
ரஜினிகாந்தின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. பாஜக ஆதரவு நிலையில் இருந்து ரஜினிகாந்த் வெளிவந்திருப்பதாகவும், அவரது அரசியல் நிலைப்பாட்டில் இது முக்கிய திருப்பம் என்றும் பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் ஓரிருவரை தொடர்புகொண்டு பேசிய ரஜினிகாந்த், அடுத்தகட்டமாக அவர்களை நேரில் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார். முதல் நபராக இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் முகம்மது அபுபக்கர் இன்று ( 29-ம் தேதி) சென்னையில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முகம்மது அபுபக்கர், ‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம். சி.ஏ.ஏ. குறித்து ரஜினிகாந்துக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக வரவேண்டும் என்பதுதான் ரஜினியின் எண்ணம்’ என்றார்.
ரஜினிகாந்த் தமிழக அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு, தனது பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"