நேற்று(நவ.10) சென்னை விமான நிலையத்திற்கு ரஜினிகாந்த் வந்த போது, செய்தியாளர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். அப்போது நிரூபர் ஒருவர், 'அந்த 7 பேரின் விடுதலை-ல தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை, குடியரசுத் தலைவர் கவனத்திற்கே கொண்டுப் போகாமல், மத்திய உள்துறை அமைச்சகம் என்று சொல்லி முடிப்பதற்குள்,
'எந்த எழு பேரு?' 'எனக்கு அது தெரியலைங்க... இப்போ தான் வந்திருக்கேன்' என்றார்.
மீண்டும் அந்த நிரூபர், 'இல்ல சார், அதுல உங்க நிலைப்பாடு என்ன' என்று கேட்ட போது, 'அதை இப்பத்தாங்க கேட்குறேன்' என்று அடுத்தக் கேள்விக்கு சென்றுவிட்டார்.
ரஜினியின் இந்தப் பேட்டியைத் தொடர்ந்து, சமூக தளங்களில் 'ரஜினுக்கு தெரியாது' என்ற ஹேஷ்டேக் அதிகம் பகிரப்பட்டது.
அதுமட்டுமின்றி, 7 பேரை விடுதலை பண்றது பற்றியே தெரியாத ரஜினி, தமிழக மக்களுக்கு என்ன செய்து விடப் போகிறார்? என்ற ரீதியில் பல எதிர்ப்புகளும், விமர்சனங்களும் ட்வீட்டப்பட்டன.
இந்த நிலையில், இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரை பற்றி எனக்கும் ஒன்றுமே தெரியாது என்று சிலர் மாயை உருவாக்கிட்டு இருக்காங்க. See.. எனக்கு தெரியும்-னா தெரியும்-னு சொல்வேன். தெரியாது-னா தெரியாது-னு சொல்வேன். இதுல வெட்கப்படுரதற்கு ஒன்னுமே கெடையாது. அன்னிக்கு கேட்ட கேள்வியில தெளிவு இல்ல. 'ராஜீவ் காந்தி கொலை குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது பற்றி தமிழக அரசு அனுப்பிய லெட்டர்' அப்டின்னு சொன்னா எனக்கு புரிஞ்சிருக்கும்.
எடுத்த எடுப்புலேயே '7 பேரின் விடுதலைக்காக-னு கேட்டா, 'எந்த 7 பேருன்னு தானே கேட்க முடியும்?'. அதுக்காக, அந்த 7 பேரை பற்றி தெரியாத அளவிற்கு முட்டாள் இல்லை இந்த ரஜினிகாந்த். பேரறிவாளன் பரோலில் இருந்து வெளியே வந்த போது, அவரிடம் தொலைபேசியில் 10 நிமிஷம் பேசி ஆறுதல் சொன்னவன் இந்த ரஜினிகாந்த்.
மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
அப்புறம், பிஜேபி ஆபத்தான கட்சியா? என்று கேட்டார்கள். அதுக்கு என்னுடைய பதில், 'எதிர்க்கட்சிகள் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க' என்பது தான்.
எதிர்க்கட்சி அப்படி நினைக்கும் போது, பிஜேபி அவங்களுக்கு ஆபத்தான கட்சி தானே!. அது ஆபத்தான கட்சியா இல்லையா என்பதை ஜனங்க முடிவு பண்ணுவாங்க.
நான் மீடியாவிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வது என்னனா, இப்போ எல்லாத்தையும் வீடியோவுல எடுக்குறாங்க. எல்லாமே பதிவாகும். சொன்னதை திரிச்சு எழுதினா தெரிஞ்சிடும். அது நல்லா இருக்காது. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க" என்றார்.
இதன்பிறகு, மீண்டும் செய்தியாளர்கள், 'பாஜக ஆபத்தான கட்சியா, இல்லையா? என்பது குறித்து ரஜினிகாந்தின் கருத்து என்ன?' என்ற கேட்ட பொழுது,
'அதற்கு இப்போது நான் கருத்து சொல்ல முடியாது' என்றார்.
பிறகு, பாஜகவுக்கு எதிராக திரளும் மிகப்பெரிய கூட்டணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?' என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரஜினி, "10 பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்து போராடுறாங்க-னா யார் பலசாலி?' என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.
அப்போ, 'நரேந்திர மோடி பலசாலி என்று சொல்கிறீர்களா?' என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, 'இதைவிட க்ளீயரா யாரும் பதில் சொல்ல முடியாது' என்றார்.
மீண்டும் ரஜினியிடம் அதுகுறித்தே கேள்வி எழுப்பிய போது, "2019-ல் தெரிஞ்சிடும்" என்றார்.
'ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடிகர்களுக்கு துளிர்விட்டுப் போச்சு' என்று அமைச்சர் கூறுகிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, "அவரு ஒரு நல்ல பதவியில இருக்காங்க. பேசும் போது யாரையும் புண்படுத்தாம பேசினால் நல்லா இருக்கும். இதே கேள்விய நான் திருப்பிக் கேட்டா நல்லா இருக்குமா? அது நல்லா இருக்காது இல்லையா!" என்றார்.
மேலும் சர்கார் படம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினிகாந்த், "ஏதும் பிரச்சனை இருந்தால் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதைவிடுத்து, தியேட்டரை உடைப்பது, படத்தை நிறுத்துவது என்பதெல்லாம் வன்முறை. வன்முறை எந்த ரூபத்தில் வந்தாலும் நான் கண்டிப்பேன்.
இலவசங்கள் 100% தேவை. ஆனால், அதை யாருக்கு எதுக்கு கொடுக்குறோம் என்பது தான் முக்கியம். ஓட்டுக்காக கொடுத்தால், அது சரியல்ல" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.