இந்திய முஸ்லிம்களை வெளியேறச் சொன்னால் அப்படி ஏதாவது வந்தால் அவர்களுக்காக நான்தான் முதலில் குரல் கொடுப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
கேள்வி: செய்தியாளர்கள் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி குறித்து ரஜினிகாந்த் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. சிஏஏ தொடர்பான உங்களுடைய கருத்து என்ன? என்.அர்.சி மக்களைப் பிரிக்கக் கூடிய முயற்சி என்று எல்லாம் அரசியல் கட்சிகள் சொல்கிறார்கள், நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை அளிக்கும் சட்டம் தேவையா? ரஜினியின் கருத்து என்ன?
ரஜினிகாந்த்: என்பிஆர் ரோம்ப அவசியம், ரொம்ப முக்கியம். இதனை 2010 காங்கிரஸ் செய்திருக்கிறார்கள். 2015-லும் செய்திருக்கிறார்கள். 2021-இல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தான் ஆக வேண்டும். அதில் யார் வெளிநாட்டினர், உள்நாட்டினர், யார் யார் எந்த நாட்டுக்காரர்கள் என்று தெரிய வேண்டாமா? அதனால், அதை எடுத்துதான் ஆக வேண்டும். அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியாது.
என்.சி.ஆர் இன்னும் அமல்படுத்தவில்லை. அதைப்பற்றி யோசனை செய்துகொண்டிருக்கிறார்கள். யோசனை பண்ணும்போது, அதை உருவாக்குவது, நடைமுறைப்படுத்துவது எல்லாம் தெரிந்த பிறகுதான் அது எப்படி இருக்கும் என்று தெரியும்.
சிஏஏ பற்றி அவர்கள் தெளிவாக சொல்லிவிட்டார்கள். கண்டிப்பாக இந்தியாவில் வாழும் மக்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. மற்ற நாடுகளில், நம்முடைய பக்கத்தில் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதா வேண்டாமா என்பதுதான் பிரச்னை. முக்கியமாக இஸ்லாம், முஸ்லிம்களுக்கு இது வந்து என்னவோ பெரிய அச்சுறுத்தல் என்று ஒரு பீதியை கிளப்பிவிட்டார்கள்.
முஸ்லிம்களுக்கு எந்தளவுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னால், பிரிவினை காலத்தில் பல முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு போகனும் என்று சொல்லும்போது அங்கே இருக்கிற இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு போனார்கள். இங்கே இருக்கிற முஸ்லிம்கள் நமக்கு இதுதான் நாடு. நமது ஜென்ம பூமி இதுதான், இதுதான் நம்ம மண், செத்தாலும் வாழ்ந்தாலும் இங்கேதான் என்று சொல்லி வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அவர்கள். அவர்கள் எப்படி இந்த நாட்டிலிருந்து வெளியே அனுப்புவார்கள். அந்த மாதிரி ஏதாவது வந்தால் நான் அவர்களுக்காக முதலில் குரல் கொடுப்பேன். அவர்களுக்காக நிற்பேன். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது.
இதை சில அரசியல் கட்சிகள் அவர்களுடைய சுய லாபத்துக்காக, சுயநலத்துக்காக அவர்களைத் தூண்டி விடுகிறார்கள். இதில் மதகுருக்களும் துணை போகிறார்கள். இது ரொம்ப ரொம்ப தப்பான விஷயம். முக்கியமாக இந்த மாணவர்கள் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்று, ஏதாவது போராட்டத்தில் இறங்கும்போது தயவு செய்து தீர ஆராய்ந்து, யோசித்து, உங்களுடைய பேராசிரியர், பெரியவர்களிடம் எல்லா கேட்டு நீங்கள் இறங்குங்கள். இல்லையென்றால், அரசியல்வாதிகள் உங்களை பயன்படுத்தப் பார்ப்பார்கள். இல்லை, இறங்கிவிட்டீர்கள் என்றால் உங்களுக்குதான் பிரச்னை வரும். ஏனென்றால், போலீஸ் யார் எப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் ஏதாவது போட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்து போகும். அதை நீங்கள் பார்த்துகொள்ள வேண்டும்.
கேள்வி: இலங்கை தமிழர்களும் மத ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்கு இடம் இல்லை. இதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன?
ரஜினிகாந்த்: இலங்கை அகதிகள் 30 வருடமாக இங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்னுடைய கருத்து. இங்கே இருப்பவர்களுக்கு அவசியம் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். அங்கே இருப்பவர்கள் குடியுரிமைக்கு விருப்பப்படக் கூடாது. அவர்கள் மைனாரிட்டி என்று இங்கு வந்தால் அங்கே விடுபடுவார்கள். அவர்கள் அங்கே சோழர்கள் காலத்தில் இருந்து இருக்கிறார்கள்.
கேள்வி: நீங்கள் வருமானவரி சரியாகக் கட்டவில்லை என்றும் உங்களுக்கு அபராதம் விதித்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. நீங்கள் குறைந்த வட்டிக்கு பணம் கடன் கொடுத்துள்ளதாக பிராமணப்பத்திரத்தில் கூறியுள்ளீர்கள் இது குறித்து உங்கள் விளக்கம் என்ன?
ரஜினிகாந்த்: நான் வந்து ஒரு நேர்மையான வரி செலுத்துபவன் என்பது வருமானவரி துறையினருக்கே தெரியும். நான் சட்டவிரோதமாக எந்த காரியமும் செய்யவில்லை. நீங்கள் எந்த ஆட்டிட்டரிடம் வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம்.
கேள்வி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து நீங்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணைக் கமிஷன் உங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. கமிஷன் முன்பு என்ன விளக்கம் அளிப்பீர்கள்?
எனக்கு இன்னும் நோட்டீஸ் வரவில்லை. வந்த பிறகு கண்டிப்பாக என்னுடைய முழு ஒத்துழைப்பை கொடுப்பேன். நான் அவர்களிடம் விளக்கம் அளிப்பேன்.
பேட்டி அளித்துக்கொண்டிருக்கும்போது நேரமில்லை என்று ரஜினிகாந்த் விரைவாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதனிடையே, டுவிட்டரில், இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக ரஜினி என்று குறிப்பிடும் #RajiniWithIndianMuslims ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.