தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றன. மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து 3 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 196 ஆகவும், ஒட்டுமொத்தமாக 340-க்கும் மேல் அதிகரித்துள்ளது. 11 மாவட்டங்களில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கேரள மழை வெள்ள பாதிப்புக்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் உதவி வருகிறார்கள். முதலமைச்சர் பினராயி விஜயன் பெயருக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாயும், சூர்யா, கார்த்தி ஆயியோர் 25 லட்சம் ரூபாயும், கமல்ஹாசன் மற்றும் சிவ கார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயும், தனுஷ் 15 லட்சம் ரூபாயும் அளித்துள்ளனர். அதேபோல் நடிகை ஸ்ரீபிரியா, ரோகினி, நயன்தாரா, நடிகர் சித்தார்த் தலா 10 லட்சம் ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். நடிகை நயன்தாரா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.