நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வருமான வரி வழக்கு திரும்பப் பெற்றதை அடுத்து, வருமான வரித்துறையின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
நடிகர் ரஜினிகாந்த் வருமான வரி 2002 முதல் 2005 ஆண்டுகளில் முறையாக செலுத்தவில்லை என கூறி 2002 - 2003 ஆம் நிதியாண்டிற்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாய் 2003- 2004 நிதியாண்டிற்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும் 2004- 2005 ஆம் நிதியாண்டில் 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாய் அபராதம் விதித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸ் ரத்து செய்ய கோரி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடிகர் ரஜினி காந்த் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பிறப்பித்த உத்தரவில் ரஜினிக்கு எதிராக வருமானவரித்துறை பிறப்பித்த அபராத நோட்டீஸ் ரத்து செய்து உத்தரவிட்டது.
ரஜினிக்கு எதிராக நோட்டீஸ் ரத்து செய்த தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது இந்நிலையில் வருமான வரித் துறையின் சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நாடுமுழுவதும் ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு குறைவான உள்ள அபராதத் தொகைக்கு புதிதாக வழக்கு தொடருவது இல்லை எனவும் ஏற்கனவே இதே தொகைக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அபராத வழக்குகளை திரும்பப் பெறுவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் எதிரான வருமான வரித்துறை மேல்முறையீடு வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரி துறை வெளியிட்ட சுற்றறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சுற்றறிக்கை படி வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை திரும்பப் பெற அனுமதி அளித்து ரஜினி காந்த் எதிரான வருமானவரி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.