திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்தவர் தம்புராஜ். இவரது செயல்பாடுகள் மன்றத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அவரைப் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி நேற்று முன்தினம் அறிக்கை அனுப்பியது ரஜினி மக்கள் மன்றம்.
இதைத் தொடர்ந்து, அவரைப் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் 147 பேர் மொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக திண்டுக்கல் மாநகர செயலாளர் ஜோசப் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட மன்றத்திற்கு, தலைமை ரஜினி மக்கள் மன்றம் இன்று எச்சரிக்கையுடன் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "தன்னலமற்ற மக்கள் சேவை என்ற புனிதமான உயர்ந்த எண்ணத்தோடும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் துவங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது.
களங்கம் கற்பிக்க முயல்வதும் மக்கள் விரோத செயல் என்பதால் அவை ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது. அத்தகைய செயல்களில் ஈடுபட நினைப்போருக்கு மன்றத்தில் இடமில்லை.
மன்றத்தின் உள் விவகாரங்களை நமக்குள் விவாதிப்பதை விடுத்து, அதை பிரச்சாரம் செய்து அதில் ஆதாயம் தேட முயற்சிப்பது ஆரோக்கியமான செயல் அல்ல. தலைமை எடுத்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் பெயர்போன ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.